தென்காசியில் 3 நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்ட தாயுடன் பசியால் தவித்த 8 மாத குழந்தை - நெல்லை நிவாரண முகாமில் சேர்ப்பு


தென்காசியில் 3 நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்ட தாயுடன் பசியால் தவித்த 8 மாத குழந்தை - நெல்லை நிவாரண முகாமில் சேர்ப்பு
x
தினத்தந்தி 31 May 2020 3:00 AM IST (Updated: 31 May 2020 1:20 AM IST)
t-max-icont-min-icon

தென்காசியில் மனநலம் பாதிக்கப்பட்ட தாயுடன் 3 நாட்களாக 8 மாத குழந்தை பசியால் தவித்து வந்தது. அவர்கள் 2 பேரும் மீட்கப்பட்டு நெல்லை நிவாரண முகாமில் சேர்க்கப்பட்டனர்.

தென்காசி,

நெல்லை மாநகர பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நெல்லையில் ரோட்டோரத்தில் மனநலம் சரியில்லாமல் சுற்றித்திரிந்தோர் மற்றும் ஆதரவற்றவர்களை மாநகராட்சி நிர்வாகம் மீட்டது. அவர்கள் நெல்லை டவுன் கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா நிவாரண தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அனைவருக்கும் உணவு, உடை, இருப்பிட வசதி செய்து கொடுத்து அவர்கள் மனஅழுத்தத்தில் இருந்து விடுபட்டு புத்துணர்ச்சி பெறுவதற்காக யோகா உள்ளிட்ட பயிற்சிகளை அளித்து வருகிறது. மேலும் அவர்களை மகிழ்விப்பதற்காக சினிமா திரைப்படங்களும் காண்பிக்கப்படுகிறது.

இந்த நிலையில் தென்காசி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட தாயும், பசியால் தவித்த அவரது 8 மாத கைக்குழந்தையும் மீட்கப்பட்டு நெல்லையில் உள்ள தற்காலிக நிவாரண முகாமில் சேர்க்கப்பட்டனர். இதுபற்றிய விவரம் வருமாறு.

நேபாளத்தை சேர்ந்தவர் ஹரேந்திர பகதூர் சிங். இவர் தென்காசி பகுதியில் கூர்க்கா வேலை செய்து வந்தார். செங்கோட்டை அருகே உள்ள கட்டளை குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் செல்வி. இவருக்கு ஏற்கனவே திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று இருந்தார். இவருக்கும், கூர்க்கா ஹரேந்திரன் பகதூர் சிங்கிற்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் மூன்று ஆண்டுகளாக தென்காசி அருகே உள்ள குத்துக்கல் வலசையில் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 8 மாதங்களுக்கு முன்பு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

அந்த குழந்தையின் பெயர் அசோக். சில நாட்களுக்கு முன்பு செல்விக்கு காசநோய் ஏற்பட்டது. இதன்பிறகு ஹரேந்திர பகதூர் சிங் கைக்குழந்தையையும், மனைவியையும் அனாதையாக விட்டு விட்டு வடமாநிலத்திற்கு சென்று விட்டார். 3 மாதங்களுக்கு மேல் செல்வி தனிமையில் இருந்து கிடைக்கும் உணவை உண்டு வாழ்ந்து வந்தார். கடந்த சில மாதங்களாகவே செல்வி மனநலம் பாதிக்கப்பட்டு கைக்குழந்தையுடன் தவித்தார். இந்த நிலையில் பசியின் கொடுமையால் தொடர்ந்து 3 நாட்களாக அந்த 8 மாத குழந்தை கதறி அழுதது.

குழந்தையின் தொடர் அழுகையை கேட்ட அக்கம்பக்கத்தினர் அந்த குழந்தைக்கு தேவையான உணவுகளை கொடுத்து, மனநலம் பாதிக்கப்பட்ட அந்த தாயை பாதுகாத்து வந்தனர். இதுகுறித்து தென்காசியில் செயல்பட்டு வரும் சமூக நல அமைப்பான பசி இல்லா தமிழகம் என்ற அமைப்பிற்கு தகவல் கிடைத்தது. இதன் நிர்வாகி முகமது அலி ஜின்னா தலைமையில் அந்த அமைப்பினர் குத்துக்கல்வலசை சென்று தாயையும், குழந்தையையும் மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தேவையான சிகிச்சைகளை மேற்கொண்டனர்.

பின்னர் இதுகுறித்த தகவலின்பேரில் தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆடிவேல், அந்த குழந்தையையும், தாயையும் மீட்டு நெல்லையில் உள்ள கொரோனா நிவாரண தற்காலிக சிறப்பு முகாமில் சேர்க்க ஏற்பாடு செய்தார். அதன்படி இருவரும் அந்த முகாமில் சேர்க்கப்பட்டனர். ஏற்கனவே, அந்த முகாமில் ஆதரவில்லாத முதியவர்கள் உள்ளனர். அவர்களுடன் 8 மாத கைக்குழந்தை அசோக் விளையாடி வருவதால், அவர்களது மனதுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story