நாளை முதல் ரெயில்கள் இயக்கப்படுவதால் தஞ்சை ரெயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்
நாளை(திங்கட்கிழமை) முதல் ரெயில்கள் இயக்கப்படுவதால் தஞ்சை ரெயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.
தஞ்சாவூர்,
நாளை(திங்கட்கிழமை) முதல் ரெயில்கள் இயக்கப்படுவதால் தஞ்சை ரெயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.
விரைவு ரெயில்கள் இயக்கம்
கொரோனா தொற்று பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் ஊரடங்கை தளர்த்தப்பட்டு கடைகள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் சில மாநிலங்களில் ரெயில் போக்குவரத்தும் தொடங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தமிழகத்தில் கோவை-மயிலாடுதுறை, மதுரை-விழுப்புரம், திருச்சி-நாகர்கோவில், கோவை-காட்பாடி ஆகிய வழித்தடங்களில் சில விரைவு ரெயில்களை மட்டும் நாளை(திங்கட்கிழமை) முதல் இயக்கப்பட உள்ளதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதில் தஞ்சை, கும்பகோணம் வழித்தடத்தில் கோவை-மயிலாடுதுறை இடையே ஜன சதாப்தி விரைவு ரெயில் நாளை முதல் இயக்கப்படுகிறது. கோவையில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் தஞ்சைக்கு பிற்பகல் 12.03 மணிக்கு வந்தடையும். தஞ்சையில் இருந்து பிற்பகல் 12.05 மணிக்கு புறப்பட்டு கும்பகோணத்துக்கு 12.41 மணிக்கும், மயிலாடுதுறைக்கு 1.40 மணிக்கும் வந்தடையும்.
முன்பதிவு தொடக்கம்
இதேபோல் மயிலாடுதுறையில் இருந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் கும்பகோணத்துக்கு 3.13 மணிக்கும், தஞ்சைக்கு 3.45 மணிக்கும் வந்தடையும். இந்த ரெயில் கோவைக்கு இரவு 9.15 மணிக்கு சென்றடையும்.
இந்த ரெயிலில் இரண்டாம் வகுப்பு இருக்கை வசதியுடன் கூடிய மொத்தம் 16 பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, கும்பகோணம் ஆகிய ரெயில் நிலையங்களில் ஜன சதாப்தி ரெயில் நின்று செல்லும். ரெயில் இயக்கப்படுவதையொட்டி தஞ்சை ரெயில் நிலையத்தில் ஏறத்தாழ 70 நாட்களுக்கு பிறகு ரெயில் டிக்கெட் முன்பதிவு சேவை நேற்றுமாலை 4 மணிக்கு தொடங்கியது. இதற்காக ஒரு கவுண்ட்டர் திறக்கப்பட்டுள்ளது.
சமூக இடைவெளி
சமூக இடைவெளியுடன் பயணிகள் நிற்பதற்கு வசதியாக மஞ்சள் நிறத்தில் கோடு போடப்பட்டுள்ளது. மேலும் ரெயிலில் ஏறக்கூடிய பயணிகள் நிற்பதற்கு வசதியாக வெள்ளை நிறத்தில் வட்டம் போடப்பட்டுள்ளது. முன்பதிவு தொடங்கிய முதல் நாளில் 30 பேர் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியுடனும் வரிசையில் நின்று முன்பதிவு செய்தனர்.
வரிசையை ஒழுங்குப்படுத்தும் பணியில் ரெயில்வே பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர்.
இது குறித்து ரெயில்வே அலுவலர்கள் கூறும்போது, நாள்தோறும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையும், ஞாயிற்றுக்கிழமை மட்டும் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையும் முன்பதிவு செய்யப்படுகிறது. இதுதவிர ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ரெயில் நிலையத்தில் காலை, மதியம், மாலை நேரங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. ஜன சதாப்தி ரெயில் செவ்வாய்க்கிழமை தோறும் இயக்கப்படாது.
Related Tags :
Next Story