திருச்சி வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கு டிக்கெட் முன்பதிவு தொடங்கியது


திருச்சி வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கு டிக்கெட் முன்பதிவு தொடங்கியது
x
தினத்தந்தி 31 May 2020 4:13 AM IST (Updated: 31 May 2020 4:13 AM IST)
t-max-icont-min-icon

கோவை, விழுப்புரம், நாகர்கோவில், மதுரை ஆகிய ஊர்களில் இருந்தும் திருச்சி வழியாகவும், திருச்சியில் இருந்தும் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கு பயணிகள் டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கியது.

திருச்சி, 

கோவை, விழுப்புரம், நாகர்கோவில், மதுரை ஆகிய ஊர்களில் இருந்தும் திருச்சி வழியாகவும், திருச்சியில் இருந்தும் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கு பயணிகள் டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கியது.

சிறப்பு ரெயில்கள்

தமிழ்நாட்டில் ஊரடங்கு தளர்வு காரணமாக தமிழ்நாட்டிற்குள் சென்னை நீங்கலாக 4 முக்கிய நகரங்களுக்கு இடையே சிறப்பு ரெயில்களை நாளை (திங்கட்கிழமை) முதல் தெற்கு ரெயில்வே இயக்குகிறது. அதன்படி, காட்பாடி-கோவை, மதுரை-விழுப்புரம் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு இன்டர்சிட்டி அதிவிரைவு ரெயில்களும், கோவை-மயிலாடுதுறை இடையே சிறப்பு ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலும், திருச்சி-நாகர்கோவில் இடையே சிறப்பு அதிவிரைவு ரெயிலும் இயக்கப்படுகிறது.

கோவை-காட்பாடி இடையே இயக்கப்படும் ரெயிலை தவிர, மற்ற 3 ரெயில்களும் திருச்சி வழியாகவும், திருச்சியில் இருந்தும் இயக்கப்படுகிறது. இதனால், திருச்சி மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களை சேர்ந்த பயணிகள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல திருச்சி மையப்பகுதியாக அமைந்துள்ளது.

டிக்கெட் முன்பதிவு

இந்த ரெயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு நேற்று மாலை தொடங்கியது. ஆன்-லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யப்படவில்லை. இதனால், ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கு டிக்கெட் முன்பதிவு செய்வதற்காக பயணிகள் திரண்டனர். அவர்கள், டிக்கெட் கவுண்ட்டர்கள் முன்பு சமூக விலகலை கடைபிடிக்கவும், கட்டாயம் முக கவசம் அணியவும் போலீசாரால் அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.

மேலும் வரிசையில் வந்த பயணிகளுக்கு ‘தெர்மல் ஸ்கேனர்’ மூலம் உடல் வெப்பநிலை அளவீடு செய்யப்பட்டது. மேற்கண்ட ரெயில்கள் புறப் படும் நேரம் மற்றும் எந்தெந்த ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என்ற கால அட்ட வணையும் வெளியிடப்பட்டுள்ளது.

ஏ.சி. பெட்டிகள் கிடையாது

திருச்சி-நாகர்கோவில் சிறப்பு அதிவிரைவு ரெயில் (வண்டி எண்: 02627/02628) திருச்சியில் இருந்து தினமும் காலை 6 மணிக்கு புறப்பட்டு, மதியம் 1 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும். அங்கிருந்து மாலை 3 மணிக்கு புறப்பட்டு, இரவு 10.15 மணிக்கு திருச்சியை வந்தடையும். இந்த ரெயில் திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நெல்லை ஆகிய ரெயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும்.

ரெயில்களின் முன்பதிவுக்கு கூட்டம் அதிகரிப்பதால் ஆன்-லைன் முன்பதிவுக்கு திருச்சி ஜங்ஷன் ரெயில்வே நிர்வாகம் தெற்கு ரெயில்வேக்கு பரிந்துரை செய்துள்ளது. குறிப்பாக எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏ.சி. பெட்டிகள் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story