தடைகாலம் இன்றுடன் முடிவடைகிறது: சின்னமுட்டம் விசைப்படகு மீனவர் சங்க பிரதிநிதிகளுடன் அதிகாரிகள் ஆலோசனை
மீன்பிடி தடைகாலம் இன்றுடன் முடிவடைகிறது. இதுதொடர்பாக சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
கன்னியாகுமரி,
மீன்பிடி தடைகாலம் இன்றுடன் முடிவடைகிறது. இதுதொடர்பாக சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அப்போது, குறைந்த படகுகளுடன் மீன்பிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மீன்பிடி தடைகாலம்
மீன்வளத்தை பெருக்குவதற்காக ஆண்டுதோறும் ஆழ்கடலில் குறிப்பிட்ட நாட்களில் மீன்பிடிப்பதற்கு தடை விதிக்கப்படும். அந்த வகையில், தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை மீன்பிடிக்க தடை விதிக்கப்படுவது வழக்கம்.
அதாவது, திருவள்ளூர் முதல் கன்னியாகுமரி கடல் வரை உள்ள விசைப்படகு மீனவர்கள் அந்த சமயத்தில் மீன்பிடிக்க செல்ல மாட்டார்கள். அதேபோல், மேற்கு கடற்கரை பகுதியான குளச்சல், கேரளா உள்ளிட்ட இடங்களிலும் மீனவர்கள் 61 நாட்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்படும். இது ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
குறைப்பு
கொரோனா ஊரடங்கு காரணமாக ஏற்கனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டது. இதனால் கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் மீனவர்கள் கடலுக்குள் செல்லாததால் அவர்களது வாழ்வாதாரம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டது. இதற்கிடையே கிழக்கு கடற்கரை பகுதியில் தடைகாலமும் அமலுக்கு வந்தது. இதுபோன்ற சூழ்நிலையால், மீனவர்கள் போதிய வருமானமின்றி தவித்தனர்.
எனவே, மீனவர்களின் நலன் கருதி இந்த வருடம் தடை காலத்தை குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி தமிழக அரசு மீன்பிடி தடைகாலத்தை குறைத்தது. எனவே, கிழக்கு கடற்கரையோர பகுதிகளில் மீன்பிடி தடைகாலம் 61 நாட்களில் இருந்து 47 நாட்களாக குறைக்கப்பட்டது. மேலும் இந்த தடைகாலம் இன்றுடன் முடிகிறது. இதனால் நாளை முதல் மீன்பிடிக்க செல்லும் ஆயத்த பணியில் கன்னியாகுமரி சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
ஆலோசனை
இந்த நிலையில் கொரோனா பரவலை தடுப்பதற்காக சமூக இடைவெளி, குறைந்த விசைப்படகுகளுடன் மீனவர்கள் செல்வது தொடர்பாக ஆலோசனை கூட்டம் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுக அலுவலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்துக்கு நாகர்கோவில் கோட்டாட்சியர் மயில் தலைமை தாங்கினார்.
இதில், நாகர்கோவில் மீன்வளத்துறை இணை இயக்குனர் இளம் வழுதி, கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன்வளத்துறை உதவி இயக்குனர் ராஜதுரை, கன்னியாகுமரி வருவாய் ஆய்வாளர் செய்யது இப்ராகீம், கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன், சின்னமுட்டம் அனைத்து விசைப்படகு சங்க பிரதிநிதிகள் ரெஜீஸ், சில்வெஸ்டர், வானவில் சகாயம், செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மீன்பிடிக்க கட்டுப்பாடு
இந்த ஆலோசனை கூட்டத்தில், விசைப்படகு மீனவர்கள் நாளை முதல் கடலுக்கு சென்று மீன்பிடிக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும், இதற்கு சில கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. கொரோனா பரவலை தடுப்பதற்காக சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், குறைந்த படகுகளுடன் மீனவர்கள் செல்ல வேண்டும், ஒரே நாளில் மீன்பிடித்து விட்டு கரைக்கு திரும்ப வேண்டும், மீன்களை விற்பனை செய்யும் போது சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பது தொடர்பாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு, மீனவர்களும் அரசுக்கு ஒத்துழைப்பதாக தெரிவித்தனர். அதே சமயத்தில், மீனவர்கள் கூட்டத்தை கூட்டி முடிவை தெரிவிப்பதாக சங்க பிரதிநிதிகள் கூறுகிறார்கள். மேலும், சில நாட்களுக்கு முன்பு தான் தடைகாலம் குறைக்கப்பட்டது. இதனால் மீன்பிடிக்க செல்வதற்கான ஆயத்த பணியில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நாளைக்குள் வலை சீரமைப்பு, படகில் ஐஸ் கட்டி ஏற்றும் பணி முடிவடைவதில் சிரமம் உள்ளது. கொரோனா அச்சமும் மீனவர்களிடையே நிலவுகிறது. இதனால், அரசு அறிவித்தபடி கன்னியாகுமரி சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லலாமா?, அல்லது சில நாட்கள் கழித்து மீன்பிடிக்க செல்லலாமா? என்பது குறித்து மீனவர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது.
Related Tags :
Next Story