மாமல்லபுரத்தில் மதுக்கடைகள் மூடப்படுவதாக பரவிய வதந்தியால் குவிந்த மது பிரியர்கள் பெட்டி, பெட்டியாக வாங்கி சென்றனர்


மாமல்லபுரத்தில் மதுக்கடைகள் மூடப்படுவதாக பரவிய வதந்தியால் குவிந்த மது பிரியர்கள் பெட்டி, பெட்டியாக வாங்கி சென்றனர்
x
தினத்தந்தி 31 May 2020 5:20 AM IST (Updated: 31 May 2020 5:20 AM IST)
t-max-icont-min-icon

மதுக்கடைகள் மூடப்படுவதாக பரவிய வதந்தியால் மாமல்லபுரம் அயல்நாட்டு மதுபான கடையில் மதுபிரியர்கள் குவிந்தனர். வரிசையில் சென்று பெட்டி, பெட்டியாக மது வகைகளை வாங்கி சென்றனர்.

மாமல்லபுரம்,

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் மதுக்கடைகள் மூடப்பட்டன. பின்னர் கோர்ட்டு அனுமதி அளித்ததன் பேரில் மீண்டும் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. தற்போது 4-ம் கட்ட ஊரடங்கு முடிவுக்கு வரும் வேளையில் சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா தொற்று நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது.

இந்த மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்றும், கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மீண்டும் செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுக்கடைகள் மூடப்பட உள்ளதாகவும் சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக வதந்தி பரவி வருகிறது.

மதுக்கடைகளை மூடிவிட்டால் மீண்டும் மது கிடைக்காமல் போய் விடுமோ, பிறகு எப்போது கடை திறப்பார்களோ என அச்சமடைந்த மதுபிரியர்கள், மதுக்கடைகளில் குவிந்தனர். பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த மது பிரியர்களால் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அயல்நாட்டு மதுபான கடையில் நேற்று மது பிரியர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

தகவலறிந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் குப்புசாமி உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கூட்டத்தை ஒழுங்குபடுத்தினர். பின்னர் மதுபிரியர்கள் பலர் சில மணி நேரம் காத்திருந்து வரிசையில் சென்று தங்களுக்கு பிடித்த மது வகைகளை வாங்கி சென்றனர்.

கூட்டத்தில் முண்டியடித்து செல்ல முயன்றவர்களை எச்சரித்த போலீசார், சமூக விலகலை கடைபிடித்து வரிசையில் சென்று மது வாங்கி செல்ல அறிவுறுத்தினர். பலர் கார்களில் வந்து பல்வேறு மது வகைகளை பெட்டி, பெட்டியாக வாங்கி சென்றனர். இதனால் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சர்வீஸ் சாலையில் கார்கள் அணிவகுத்து நின்றன. மேலும் மொத்தமாக மது வாங்கி சென்றவர்களுக்கு வசதியாக அங்கு சாலையோர திடீர் பை கடைகளும் தோன்றின.

வரிசையில் நின்றவர்களுக்கு துணி பைகளை விற்று வியாபாரம் செய்த துணிப்பை வியாபாரிகளையும் காண முடிந்தது. சென்னையில் இருந்து கார்களில் வந்திருந்த இளம்பெண்கள் சிலரும் வரிசையில் சென்று தங்களை யாரும் அடையாளம் கண்டு கொள்ளாத வகையில் முகத்தை சுடிதார் துப்பட்டாவால் மூடிக்கொண்டு பீர், ஒயின் உள்ளிட்ட மதுவகைகளை வாங்கி சென்றனர்.

Next Story