பல்லாவரத்தில் பெண் டி.எஸ்.பி. குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு கொரோனா


பல்லாவரத்தில் பெண் டி.எஸ்.பி. குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 31 May 2020 5:32 AM IST (Updated: 31 May 2020 5:32 AM IST)
t-max-icont-min-icon

பல்லாவரத்தில் பெண் டி.எஸ்.பி.யை தொடர்ந்து அவரது குடும்பத்தைச் சேர்ந்த மேலும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

தாம்பரம்,

சென்னையை அடுத்த பல்லாவரம் அருள்நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பெண் டி.எஸ்.பி. ஒருவர் குடியிருந்து வருகிறார். அவருக்கு ஏற்கனவே கொரோனா பாதிப்பு உறுதியாகி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவரது குடும்பத்தினருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவரது குடும்பத்தைச் சேர்ந்த மேலும் 6 பேருக்கு நேற்று கொரோனா பாதிப்பு உறுதியானது.

தாம்பரம் நகராட்சி திருவள்ளுவர் நகர் பகுதியில் அரிசி கடை வியாபாரியை தொடர்ந்து அவரது குடும்பத்தில் 4 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அதே பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுவன், ஒரு பெண்ணுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் சிறுவனின் உறவினர்களான 3 பெண்கள், 3 சிறுவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

பல்லாவரம் நகராட்சி 14வது வார்டுக்கு உட்பட்ட கீழ்கட்டளை பகுதியில் இதுவரை 57 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே அப்பகுதியை முழுவதுமாக சீல் வைத்து சுகாதார பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னையை அடுத்த பள்ளிக்கரணை போலீஸ் நிலையத்தில் சப்இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவருக்கு கடந்த 2 நாட்களாக கடுமையான காய்ச்சல் இருந்ததால் பெருங்குடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை செய்தார். அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து சப்இன்ஸ்பெக்டரை சுகாதார துறை அதிகாரிகள் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். பள்ளிக்கரணை போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் மேலும் 22 போலீசாருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. போலீஸ் நிலையம் முழுவதும் கிருமி நாசினி மருந்து தெளித்தனர்.

அதேபோல் கொரோனா பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டு உள்ள நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த பரங்கிமலை நுண்ணறிவு பிரிவு பெண் சப்இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர் ஆகியோருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

Next Story