சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து விமானத்தில் கோவை வந்த 6 பேருக்கு கொரோனா தொற்று


சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து விமானத்தில் கோவை வந்த 6 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 31 May 2020 6:09 AM IST (Updated: 31 May 2020 6:09 AM IST)
t-max-icont-min-icon

சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து கோவைக்கு விமானத்தில் வந்த 3 திருநங்கைகள் உள்பட 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

கோவை,

சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து கோவைக்கு விமானத்தில் வந்த 3 திருநங்கைகள் உள்பட 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

விமானங்கள் இயக்கம்

நாடு முழுவதும் உள்நாட்டு விமான சேவை கடந்த 25-ந் தேதி முதல் தொடங்கப்பட்டு உள்ளது. இதனால் சென்னை, டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் இருந்து கோவைக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு விமானம் மூலம் வருகிறவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதற்காக கோவை விமானநிலையத்திலேயே பயணிகளின் சளி, ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சென்னை, ஐதராபாத், டெல்லி, பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து கோவைக்கு 6 விமானங்கள் மூலம் 409 பேர் வந்தனர். இதில் கோவையை சேர்ந்தவர்கள் 200 பேர். மீதம் உள்ளவர்கள் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரின் ரத்தம், சளி மாதிரி எடுக்கப்பட்டு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

3 திருநங்கைகள்

இந்த பரிசோதனையில் 3 திருநங்கைகள் உள்பட 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து சுகாதார துறை அதிகாரிகள் கூறியதாவது:-

கோவை விமானநிலையத்திற்கு நாள்தோறும் ஏராளமானோர் வருகின்றனர். இவர்களில் கோவையை சேர்ந்தவர்கள் மட்டும் கொரோனா கண்காணிப்பு மையத்தில் தங்க வைக்கப்படுகின்றனர். பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

கடந்த 29-ந் தேதி கோவை வந்த விமான பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 3 திருநங்கைகள் உள்பட 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

கோவையை சேர்ந்தவர்கள் 4 பேர்

இதில் பொள்ளாச்சியை சேர்ந்த 29 வயது மற்றும் 30 வயது உள்ள திருநங்கைகள் 2 பேர், கோவை கணபதியை சேர்ந்த 50 வயது ஆண், 40 வயது பெண் ஆகிய 4 பேர் ஆவர். மீதமுள்ளவர்களில் ஒருவர் தேனியை சேர்ந்த 51 வயது திருநங்கை, மற்றொருவர் சேலத்தை சேர்ந்த 60 வயது முதியவர்.

கோவையை சேர்ந்த 4 பேரும் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தேனி மற்றும் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து அந்த மாவட்ட சுகாதார துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

6 பேருக்கு சிகிச்சை

கோவையில் ஏற்கனவே ஓட்டல் ஊழியர் ஒருவர், அன்னூரை சேர்ந்த பெண் ஆகிய இருவரும் சென்னையில் இருந்து கோவைக்கு விமானத்தில் வந்த போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தற்போது மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதை தொடர்ந்து கோவையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்து உள்ளது.

இவர்கள் அனைவருக்கும் கோவையில் வைத்து கொரோனா தொற்று ஏற்படவில்லை என்பதால் இந்த தொற்று எண்ணிக்கை கோவை மாவட்ட கணக்கில் வராது. எந்த பகுதியில் தங்கியிருந்த போது கொரோனா தொற்று ஏற்பட்டதோ அந்த பகுதியின் எண்ணிக்கையில் வரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story