வெளி மாநிலம், மாவட்டங்களில் இருந்து சேலம் வந்த 2 குழந்தைகள் உள்பட 37 பேருக்கு கொரோனா


வெளி மாநிலம், மாவட்டங்களில் இருந்து சேலம் வந்த 2 குழந்தைகள் உள்பட 37 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 31 May 2020 6:49 AM IST (Updated: 31 May 2020 6:49 AM IST)
t-max-icont-min-icon

வெளி மாநிலம், மாவட்டங்களில் இருந்து சேலம் வந்த 2 குழந்தைகள் உள்பட 37 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சேலம்,

வெளி மாநிலம், மாவட்டங்களில் இருந்து சேலம் வந்த 2 குழந்தைகள் உள்பட 37 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 144 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ்

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி வெளிமாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து சேலம் வருபவர்களை மாவட்ட எல்லைகளில் சுகாதாரத்துறையினர் மருத்துவ பரிசோதனை செய்து வருகின்றனர்.

இவர்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் ஏற்கனவே கொரோனாவால் 107 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

2 குழந்தைகள் உள்பட 37 பேர்

இந்த நிலையில் அசாம், டெல்லி, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து சேலம் வந்த தலா ஒருவர், ஜார்கண்ட், கர்நாடகம், மராட்டியம் ஆகிய மாநிலங்களில் இருந்து சேலம் வந்த தலா 2 பேர், குஜராத் மாநிலத்தில் இருந்து சேலம் வந்த 5 பேர் என மொத்தம் 14 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.

இதேபோல் சென்னையில் இருந்து சேலத்துக்கு வந்த 14 பேர், பெரம்பலூரில் இருந்து வந்த ஒருவர் மற்றும் சேலத்தை சேர்ந்த 8 பேர் என மொத்தம் 23 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. கொரோனா தொற்று பாதித்தவர்களில் 2 மற்றும் 3 வயதுடைய 2 பெண் குழந்தைகளும் அடங்குவர். சேலம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மொத்தம் 37 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு டாக்டர் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதன் மூலம் சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 144 ஆக உயர்ந்தது.

ஓட்டல் உரிமையாளருக்கு அறிகுறி

இதற்கிடையே சேலம் சாரதா கல்லூரி சாலையில் உள்ள பிரபல ஓட்டல் உரிமையாளர் மற்றும் அங்கு வேலை பார்த்த 3 சப்ளையர்களுக்கு கொரோனா அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களும் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் அந்த ஓட்டலுக்கு வந்து பார்சல் சாப்பாடு வாங்கி சென்ற பொதுமக்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.

மேலும் சாப்பாடு வாங்கி சென்றவர்கள் தாங்களாகவே முன்வந்து மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அந்த ஓட்டலை 14 நாட்கள் மூடவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அங்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இதனிடையே சேலம் கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்த ஒருவர் சண்டிகரில் மத்திய பாதுகாப்பு படைப்பிரிவில் பணியாற்றி வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலம் வந்தார். தற்போது அவருக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

Next Story