கர்ப்பிணி பெண் உள்பட 4 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37 ஆனது


கர்ப்பிணி பெண் உள்பட 4 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37 ஆனது
x
தினத்தந்தி 31 May 2020 6:50 AM IST (Updated: 31 May 2020 6:50 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் 33 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தநிலையில் நேற்று கர்ப்பிணி பெண் உள்பட மேலும் 4 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

புதுச்சேரி,

புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுவையில் ஏற்கனவே 35 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் 2 பேர் குணமடைந்து உள்ளனர். இந்த நிலையில் மேலும் 4 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 7,043 பேருக்கு பரிசோதனை நடத்தி உள்ளோம். அதில் 68 பேருக்கு சோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது.

நாளை முதல் (திங்கட்கிழமை) ஊரடங்கு தளர்வு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இதனால் சுகாதாரத்துறைக்கு ஏற்படும் நெருக்கடிகளை முதல்-அமைச்சரிடம் தெரிவித்து உள்ளோம். மருத்துவ துறைக்கு தேவையான ஊழியர்கள் நிதியை வழங்குமாறும் கேட்டுள்ளோம். ஜூன், ஜூலை மாதங்களில் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று மருத்துவ வல்லுனர்கள் கூறியுள்ளனர். அதுமட்டுமின்றி மாகி பகுதியில் மழைக்காலம் ஆரம்பிக்கும். இதனால் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உள்ளோம். புதுவை மாநிலத்தை பொறுத்தவரை இதுவரை ஒட்டுமொத்தமாக 61 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 24 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 37 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

சுகாதாரத்துறை இயக்குனர் மோகன் குமார் கூறியதாவது:- புதுவையில் அரும்பார்த்தபுரத்தை சேர்ந்த வங்கி ஊழியர் ஒருவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அவருக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டுள்ளது என்பதை ஆய்வு செய்து வருகிறோம். அதேபோல் காலாப்பட்டில் டாக்டர் ஒருவர் வீட்டில் வேலை செய்த வேலைக்கார பெண்ணுக்கு சேலம் சென்றபோது தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுதவிர கோரிமேடு ஜிப்மர் வளாகத்தில் வளைகாப்பு நடத்தப்பட்ட கர்ப்பிணிக்கும், மண்ணாடிப்பட்டு பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story