மீன்பிடி தடைக்காலம் நிறைவு: மீனவர்கள் நாளை முதல் கடலுக்குச்செல்கிறார்கள்


மீன்பிடி தடைக்காலம் நிறைவு: மீனவர்கள் நாளை முதல் கடலுக்குச்செல்கிறார்கள்
x
தினத்தந்தி 31 May 2020 1:26 AM GMT (Updated: 31 May 2020 1:26 AM GMT)

தடைக்காலம் நிறைவடைவதையொட்டி புதுச்சேரி மீனவர்கள் நாளை (திங்கட்கிழமை) முதல் மீன்பிடிக்க கடலுக்குச்செல்ல தயாராகி வருகிறார்கள்.

புதுச்சேரி,

புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பிராந்தியங்களில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 14-ந் தேதி முதல் ஜூன் மாதம் 15-ந் தேதி வரையும், கேரளாவை ஒட்டியுள்ள மாகியில் ஜூன் மாதம் 15-ந் தேதி முதல் ஆகஸ்டு மாதம் வரையும் மீன்பிடி தடை காலம் ஆகும். இந்த காலகட்டத்தில் விசைப்படகுகள் மூலம் சென்று மீன் பிடிப்பதற்கான தடை அமலில் இருப்பது வழக்கம்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக புதுவை, காரைக்கால் பகுதிகளில் கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதலே மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. எனவே மீன்பிடி தடைக்காலத்தை குறைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை விடப்பட்டது. அதை ஏற்று மத்திய அரசும் மீன்பிடி தடைக்காலத்தை மே 31-ந் தேதியாக குறைத்து அறிவித்தது.

புதுச்சேரியை பொறுத்தவரை விசைப்படகுகள் 170, காரைக்காலில் 221, மாகியில் 21, ஏனாமில் 70 என உள்ளன. இதுமட்டுமின்றி பதிவு செய்யப்பட்ட மோட்டார் பொருத்திய 2,400 படகுகளும், 1,700 பைபர் கட்டுமரங்களும் உள்ளன. மீன்பிடி தொழிலில் சுமார் 16 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தடை காலத்தின்போது புதுவை, காரைக்கால் பிராந்தியத்தில் உள்ள 461 விசைப்படகுகளும் சுமார் 2,000 மோட்டார் பொருத்திய படகுகளும் தொழிலுக்கு செல்லாமல் மீன்பிடி துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் சுமார் 45,000 முதல் 50 ஆயிரம் மெட்ரிக் டன் அளவுக்கு மீன்கள் பிடிக்கப்படுகிறது. இந்த மீன்கள் சுமார் ரூ.500 கோடிக்கு விற்பனை ஆகிறது.

கடந்த 2 மாதங்களாக தொழிலுக்கு செல்லாத நிலையில் மீன்பிடி தடைக்காலம் இன்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) நிறைவடைவதையொட்டி நாளை (திங்கட்கிழமை) முதல் புதுச்சேரி, காரைக்கால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச்செல்ல உள்ளனர். இதற்காக அவர்கள் படகுகள், வலைகளை சீரமைத்து தயார் நிலையில் வைத்துள்ளனர். ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த மீன்பிடி தடைக்காலம் ஜூன் மாதம் 15-ந் தேதி வரை இருக்கும் என கருதி சில மீனவர்கள் தங்களது படகுகளை சீரமைக்காமல் வைத்து இருந்தனர். இவர்கள் வருகிற 5-ந் தேதி கடலுக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Next Story