சேலத்தில் கைதிகளுக்கு கொரோனா எதிரொலி: சாமியானா பந்தல் அமைத்து பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெறும் போலீசார்


சேலத்தில் கைதிகளுக்கு கொரோனா எதிரொலி: சாமியானா பந்தல் அமைத்து பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெறும் போலீசார்
x
தினத்தந்தி 31 May 2020 1:53 AM GMT (Updated: 31 May 2020 1:53 AM GMT)

சேலத்தில் கைதிகளுக்கு கொரோனா பாதிப்பு இருந்ததால், போலீஸ் நிலையம் அருகே சாமியானா பந்தல் அமைத்து பொதுமக்களிடம் புகார் மனுக்களை போலீசார் பெற்று வருகிறார்கள்.

சேலம், 

சேலத்தில் கைதிகளுக்கு கொரோனா பாதிப்பு இருந்ததால், போலீஸ் நிலையம் அருகே சாமியானா பந்தல் அமைத்து பொதுமக்களிடம் புகார் மனுக்களை போலீசார் பெற்று வருகிறார்கள்.

கொரோனா வைரஸ்

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் வெளிமாநிலம் மற்றும் மாநிலங்களிலிருந்து சேலம் வருபவர்களை மாவட்ட எல்லையிலேயே மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. இதில் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அழகாபுரம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர், பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் இரும்பாலை போலீசார் கைது செய்து மருத்துவ பரிசோதனை செய்தனர். இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

போலீஸ் நிலையம் மூடப்பட்டது

இதேபோல் சேலம் தாதகாப்பட்டி பகுதியை சேர்ந்த 35 வயதுடைய அழகுகலை நிலைய உரிமையாளரை, பெண்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய வழக்கில் சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து மருத்துவ பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து 2 கைதிகளும் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனிமை வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதனிடையே இவர்களிடம் விசாரணை நடத்திய உயர் போலீஸ் அதிகாரிகள் உள்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் வீடு மற்றும் தங்கும் விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். போலீஸ் நிலையங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டன. மேலும் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் மூடப்பட்டது. இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநகரில் உள்ள 18 போலீஸ் நிலையங்களுக்குள் புகார் மனுக்களை போலீசார் பெறுவதில்லை. அதாவது போலீஸ் நிலையங்கள் அருகே சாமியானா பந்தல் அமைத்து பொதுமக்களிடம் போலீசார் புகார் மனு பெற்று வருகின்றனர். மேலும் பொது மக்களின் பிரச்சினைகளை அங்கேயே பேசி தீர்த்து வைக்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Next Story