சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கக்கோரி டோக்கன்களுடன் வந்து போராட்டம் நடத்திய பீகார் தொழிலாளர்கள்
சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கக்கோரி டோக்கன்களுடன் வந்து பீகார் மாநில தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினார்கள். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
ஈரோடு,
சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கக்கோரி டோக்கன்களுடன் வந்து பீகார் மாநில தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினார்கள். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
பீகார் தொழிலாளர்கள்
ஈரோடு மாவட்டத்துக்கு பல்வேறு வட மாநிலங்களிலும் இருந்து புலம் பெயர்ந்து வந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார்கள். தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல விரும்பி விண்ணப்பம் செய்து இருந்த அனைவருக்கும் வருவாய்த்துறை அதிகாரிகள் டோக்கன்கள் வழங்கி, அவர்களின் சொந்த மாநிலத்துக்கு செல்லும் சிறப்பு ரெயில்களில் அனுப்பி வைத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று ஈரோடு மல்லிகை அரங்கம் பகுதியில் பீகார் மாநிலத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வந்து கூடினார்கள். வழக்கமாக மல்லிகை அரங்கம் உள்பட 5 திருமண மண்டபங்களில் வடமாநில தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு, அங்கிருந்து ரெயில் நிலையத்துக்கு அழைத்துச்செல்லப்படுவது வழக்கம். ஆனால் நேற்று வட மாநில ரெயில்கள் எதுவும் ஈரோட்டில் இருந்து இயக்கப்படவில்லை. ஆனால் பீகார் மாநில தொழிலாளர்கள் திடீரென்று வந்து குவிந்தனர்.
டோக்கன்
மண்டபம் திறக்கப்படாததால் அவர்கள் சாலையில் குவிந்து நின்று கொண்டு இருந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் விசாரணை நடத்தியபோது, பீகார் மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல ஏற்கனவே டோக்கன் வாங்கி இருந்தது தெரியவந்தது.
இதுபற்றி போலீஸ் அதிகாரிகள் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘இவர்கள் ஏற்கனவே 2 நாட்களுக்கு முன்பு பீகார் சென்ற ரெயிலில் செல்வதற்காக டோக்கன் பெற்றவர்கள் என்பதும், குறிப்பிட்ட நாளில் இவர்கள் வராததால் அந்த ரெயிலில் 959 பேர் மட்டுமே புறப்பட்டு சென்றதும் தெரியவந்தது.
போராட்டம்
இதுகுறித்து போலீசார் வடமாநில தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால், எங்களை உடனடியாக ரெயிலில் பீகாருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் கூடி நின்று போராட்டம் நடத்தினார்கள். அதைத்தொடர்ந்து போலீசார், அடுத்த ரெயில் வரும் தேதி அனைவருக்கும் முறையாக தெரிவிக்கப்படும். அதுவரை அவரவர் தங்கி இருக்கும் இடங்களில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
போலீசாரின் அறிவுரையால் சமாதானம் அடைந்த தொழிலாளர்கள் அங்கி ருந்து புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவத் தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story