ஈரோடு மாவட்டத்தில் வீட்டு தனிமைப்படுத்துதலில் 1,300 பேர் பிற மாநிலம், மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள்


ஈரோடு மாவட்டத்தில் வீட்டு தனிமைப்படுத்துதலில் 1,300 பேர் பிற மாநிலம், மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள்
x
தினத்தந்தி 31 May 2020 8:37 AM IST (Updated: 31 May 2020 8:37 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் பிற மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து வந்த 1,300 பேர் வீட்டு தனிமைப்படுத்துதலில் உள்ளனர்.

ஈரோடு, 

ஈரோடு மாவட்டத்தில் பிற மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து வந்த 1,300 பேர் வீட்டு தனிமைப்படுத்துதலில் உள்ளனர்.

1,300 பேர்

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து அதிகாரிகள் களப்பணி செய்து வருகிறார்கள். ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளும் இந்த பணியில் ஈடுபட்டு உள்ளனர். குறிப்பாக ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.சக்திகணேசன் தலைமையில் போலீசார் மாவட்ட எல்லையில் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டு உள்ளனர். பிற மாவட்டங்களில் இருந்து இ-பாஸ் மூலம் வரும் அனைவரும் கண்காணிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட பகுதி சுகாதாரத்துறை மூலம் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறார்கள்.

இதுபோல் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சவுண்டம்மாள் தலைமையில் சுகாதாரப்பணியாளர்கள் வீடு வீடாக சென்று பரிசோதனை செய்து வருகிறார்கள். அதன்படி ஈரோடு மாவட்டத்தில் வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து வந்த 1,300 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இவர்கள் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.

தீவிர கண்காணிப்பு

இதுபோல் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி கொரோனா சிறப்பு மருத்துவமனையில் பரிசோதனை முடிவுகளுக்காக 50-க்கும் மேற்பட்டவர்கள் காத்து இருக்கிறார்கள். கொரோனா கண்டறியப்பட்டவர்கள் 2 பேர் இங்கு தீவிர கண்காணிப்பு மற்றும் சிகிச்சையில் உள்ளனர். மேலும் கொரோனா தொற்றுக்கான அறிகுறி தென்படும் சிலரும் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா சிறப்பு வார்டில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர்.

இதுபற்றி ஈரோடு மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சவுண்டம்மாள் கூறியதாவது:- ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை தற்போது கொரோனா பாதிப்பு என்று கண்டறியப்படும் நபர்கள் வெளி மாநிலம் அல்லது கொரோனா பாதித்த பிற மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் ஆவார்கள். நமது மாவட்டத்தை பொறுத்தவரை கலெக்டர் சி.கதிரவன் ஆலோசனையின் பேரில் அனைத்து துறையினரும் மிகவும் சிறப்பாக செயல்பட்டு கொரோனா இல்லாத மாவட்டமாக உருவாக்கி இருந்தோம். அது தற்போது அந்த நிலையில்தான் தொடர்கிறது. ஆனால், வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து வருபவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இந்த நேரத்தில் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

வீடுகளில் தனிமை...

குறிப்பாக வெளி மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் தங்களை கொரோனா பரிசோதனைக்கு உள்படுத்திக்கொள்ள வேண்டும். யாருக்கும் புதிதாக கொரோனா பரவல் வந்து விடக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நமது மாவட்டத்தை பொறுத்தவரை பிற மாவட்டங்களில் இருந்து வரும் அனைவரும் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளனர். இதுபோல் பிற மாநிலங்களில் இருந்து வருபவர்களும் பரிசோதனை செய்யப்படுகிறார்கள். விமானங்கள் மூலம் வருபவர்கள் அந்தந்த விமான நிலையங்களிலேயே பரிசோதனைக்கு பின்னரே அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

தற்போது ஈரோடு மாவட்டத்தில் 1,300 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இவர்களில் பரிசோதனை செய்யப்பட்டு அறிகுறி இல்லை என்றால் 14 நாட்கள் தனிமைக்காலம் முடிந்ததும் இயல்பு நிலைக்கு திரும்பலாம். பாதிப்பு கண்டறியப்பட்டால் அவர்கள் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்படுவார்கள். இனிமேல் நமது மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கு கூட கொரோனா தொற்று ஏற்படாமல் தடுப்பதை சவாலாக ஏற்று பணியாற்றி வருகிறோம். மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.

இவ்வாறு மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சவுண்டம்மாள் கூறினார்.

Next Story