போக்குவரத்து பணிமனை முன்பு தொழிற்சங்க கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்


போக்குவரத்து பணிமனை முன்பு தொழிற்சங்க கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 31 May 2020 9:24 AM IST (Updated: 31 May 2020 9:24 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் போக்குவரத்து பணிமனை முன்பு நேற்று தொழிற்சங்க கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர், 

கடலூர் போக்குவரத்து பணிமனை முன்பு நேற்று தொழிற்சங்க கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பளம் வழங்கவில்லை

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இந்த ஊரடங்கால் பஸ் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் போக்குவரத்து தொழிலாளர்கள் பாதிக்கப்படாதவாறு அவர்களுக்கு விடுப்புடன் சம்பளம் வழங்க கோரி அரசு உத்தரவிட்டது.

ஆனால் விழுப்புரம் மண்டலம் கடலூர் பணிமனையில் உள்ள போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் நேற்று காலை கடலூர் போக்குவரத்து பணிமனை முன்பு ஒன்று திரண்டனர்.

ஆர்ப்பாட்டம்

பின்னர் அவர்கள் தொ.மு.ச. பொதுச்செயலாளர் பழனிவேல் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சி.ஐ.டி.யு. மாநில துணை தலைவர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். இதில் எம்.எல்.எப். பொதுச்செயலாளர் மணிமாறன், ஏ.ஏ.எல்.எல்.எப். பொதுச் செயலாளர் கருணாநிதி, ஐ.என்.டி.யு.சி. பொதுச்செயலாளர் சாமிநாதன் மற்றும் போக்குவரத்து தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதுபற்றி அறிந்த திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விரைந்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்க கூட்டமைப்பினரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story