திண்டுக்கல்லில் இருந்து உத்தரபிரதேசத்துக்கு சிறப்பு ரெயிலில் செல்லும் 1,600 தொழிலாளர்கள்


திண்டுக்கல்லில் இருந்து உத்தரபிரதேசத்துக்கு சிறப்பு ரெயிலில் செல்லும் 1,600 தொழிலாளர்கள்
x
தினத்தந்தி 31 May 2020 9:54 AM IST (Updated: 31 May 2020 9:54 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் இருந்து உத்தரபிரதேசத்துக்கு இன்று 1,600 தொழிலாளர்கள் சிறப்பு ரெயிலில் செல்கின்றனர்.

திண்டுக்கல், 

திண்டுக்கல்லில் இருந்து உத்தரபிரதேசத்துக்கு இன்று 1,600 தொழிலாளர்கள் சிறப்பு ரெயிலில் செல்கின்றனர்.

வெளிமாநில தொழிலாளர்கள்

திண்டுக்கல் மாவட்டத்தில் நூற்பாலைகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் வெளிமாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். ஆந்திரா, பீகார், ஒடிசா, ஜார்கண்ட், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த சுமார் 8 ஆயிரம் பேர் இங்கு வேலை செய்கின்றனர். கொரோனா தடுப்புக்காக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால், அவர்களில் பலர் வேலையிழந்தனர்.

இதைத்தொடர்ந்து அவர்கள் சொந்த மாநிலத்துக்கு திரும்பி செல்ல விரும்புகின்றனர். இதற்காக மாவட்ட நிர்வாகத்திடம் விண்ணப்பித்து வருகின்றனர். அவ்வாறு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு செலவில், ரெயில்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் பீகார், ஒடிசா, ஜார்கண்ட உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.

1,600 பேர்

இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக மாவட்ட நிர்வாகத்திடம் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் 1,600 பேர் இன்று (ஞாயிற்றுக் கிழமை) சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர். இவர்களுக்காக மதியம் 1 மணிக்கு திண்டுக்கல்லில் இருந்து சிறப்பு ரெயில் உத்தரபிரதேசத்துக்கு இயக்கப்படுகிறது.

அந்த ரெயிலில் பயணிகள் மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் அனுப்பி வைக்கப்பட உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் செய்து வருகின்றனர்.

Next Story