ஆட்டோவில் 2 பயணிகளை ஏற்றிச்செல்ல அனுமதிக்க வேண்டும் டிரைவர்கள் கோரிக்கை


ஆட்டோவில் 2 பயணிகளை ஏற்றிச்செல்ல அனுமதிக்க வேண்டும் டிரைவர்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 31 May 2020 10:01 AM IST (Updated: 31 May 2020 10:01 AM IST)
t-max-icont-min-icon

ஆட்டோவில் 2 பயணிகளை ஏற்றிச்செல்ல அனுமதிக்க வேண்டும் என்று டிரைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பழனி, 

ஆட்டோவில் 2 பயணிகளை ஏற்றிச்செல்ல அனுமதிக்க வேண்டும் என்று டிரைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆட்டோக்கள்

ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த 2 மாதமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மட்டுமின்றி சிறு, குறு தொழில்களும் முடங்கின. இந்த நிலையில் தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதையடுத்து சிறு, குறு தொழில்கள் படிப்படியாக செயல்பட தொடங்கி உள்ளன. ஆட்டோக்களை இயக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆனால் ஆட்டோக்களில் ஒரு பயணியை மட்டுமே ஏற்றிச்செல்ல அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்துபவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பழனி பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் கூறியதாவது:- பழனியை பொறுத்தமட்டில் முருகன் கோவிலை மையப்படுத்தியே அதிக அளவில் ஆட்டோக்கள் இயக்கப்படும். அதாவது பஸ்நிலையம், ரெயில்நிலையம் மற்றும் பழனியில் உள்ள பிற கோவில்களுக்கு பக்தர்கள் சென்றுவர பெரும்பாலும் ஆட்டோக்களையே பயன்படுத்தி வந்தனர். அதேபோல் பள்ளி மாணவ-மாணவிகளை ஏற்றிச்செல்லவும் பெற்றோர் ஆட்டோக்களை பயன்படுத்தினர். இதனால் எங்களுக்கு போதுமான அளவு வருமானம் கிடைத்து வந்தது.

வருமானம் இல்லை

இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக இங்குள்ள கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டுவிட்டன. இதனால் வெளியூர் பக்தர்கள் யாரும் வருவதில்லை. உள்ளூரில் வசிப்பவர்களே வெளியில் செல்வதற்கு தற்போது ஆட்டோக்களை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். எதிர்பார்த்த வருமானம் கிடைக்காது என்றாலும் குடும்ப செலவுக்காவது பணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நாங்கள் ஆட்டோக்களை இயக்குகிறோம். ஆனால் ஆட்டோவில் ஒரு நபரை தான் ஏற்றிச்செல்ல வேண்டும் என்று அரசு விதித்த கட்டுப்பாடு காரணமாக எங்களுக்கு தினமும் சவாரி கிடைப்பதே சிரமமாக உள்ளது. இதனால் குடும்ப செலவுக்கு கூட பணம் கிடைப்பதில்லை. எனவே ஆட்டோவில் அதிகபட்சமாக 2 பேரை ஏற்றிச்செல்ல அரசு அனுமதிக்க வேண்டும். அப்போது தான் எங்கள் வாழ்வாதாரம் மேம்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story