லாரியில் கொண்டு வந்து 25 கிலோ மூட்டை அரிசி ரூ.800-க்கு விற்பனை தரமற்றது என திருப்பி ஒப்படைக்க வந்த பொதுமக்கள்


லாரியில் கொண்டு வந்து 25 கிலோ மூட்டை அரிசி ரூ.800-க்கு விற்பனை தரமற்றது என திருப்பி ஒப்படைக்க வந்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 31 May 2020 10:24 AM IST (Updated: 31 May 2020 10:24 AM IST)
t-max-icont-min-icon

பல்லடம் பகுதியில் 25 கிலோ அரிசி மூட்டை ரூ.800-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதை வாங்கி சென்ற பொதுமக்கள் தரமற்றது என திருப்பி ஒப்படைக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர்,

பல்லடம் பகுதியில் 25 கிலோ அரிசி மூட்டை ரூ.800-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதை வாங்கி சென்ற பொதுமக்கள் தரமற்றது என திருப்பி ஒப்படைக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

குறைந்த விலையில் அரிசி

பல்லடம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது குப்புசாமி நாயுடுபுரம். இப்பகுதிக்கு நேற்று காலை ஒரு லாரியில் வந்த சிலர் கூவி கூவி அரிசி வியாபாரத்தை தொடங்கினர். 25 கிலோ எடையுள்ள ஒரு அரிசி மூட்டையின் விலை ரூ.800 என்றனர். அப்போது, தாங்கள் ஆரணி பகுதியில் மிகப்பெரிய அளவிலான அரிசி ஆலை ஒன்று நடத்தி வருவதாகவும், ஊரடங்கு காரணமாக ஆலை செயல்படவில்லை எனவும் தெரிவித்தனர். மேலும், இதனால் ஆலை அதிபர் நஷ்டம் அடைந்தது மட்டுமின்றி அதில் பணிபுரியும் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு தேங்கிய அரிசி மூட்டைகளை குறைந்த விலையில் விற்பதன் மூலம் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு உதவ முடியும். எனவே தாங்கள் அரிசியை குறைந்த விலைக்கு விற்பதாக கூறினர்.

தரமற்ற அரிசி

இதை நம்பிய பொதுமக்கள் கூட்டம், கூட்டமாக வந்து அரிசி மூட்டைகளை வாங்கி சென்றனர். நேரம் செல்லச்செல்ல அரிசி லோடு ஏற்றி வந்த லாரியை சூழ்ந்த பொதுமக்கள் தரமான பொன்னி அரிசி விலை குறைவாக கிடைப்பதாக எண்ணி தலா 2, 3 மூட்டைகள் என அள்ளிச் செல்ல தொடங்கினர். நேரம் செல்லச் செல்ல சூடுபிடித்த வியாபாரம் ஒரு சில வாடிக்கையாளர்கள் அரிசி மூட்டையுடன் திரும்பி வந்ததால் பிசுபிசுக்க தொடங்கியது. அரிசி மூட்டைகளை வாங்கிச் சென்றவர்கள் வீட்டில் சென்று பிரித்துப் பார்த்தபோது தான் தெரிந்தது அது தரமற்ற அரிசி என்பது. சிலர் அதை சமையல் செய்து பார்த்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிலர் அரிசி மூட்டைகளை எடுத்துக்கொண்டு வேகவேகமாக வந்து விற்பனையாளர்களை முற்றுகையிட்டனர். அவர்களிடம் சமாதானம் பேசிய அரிசி வியாபாரிகள் அவர்கள் திருப்பி கொடுத்த அரிசி மூட்டையை பெற்றுக்கொண்டு அவர்களுக்கான பணத்தை கொடுத்துவிட்டு குப்புசாமிநாயுடுபுரம் பகுதியில் இருந்து தப்பிச் சென்றனர். அரிசி தரமற்றது என தெரியவந்ததும், அதை வாங்கி சென்ற பொதுமக்கள் திருப்பி ஒப்படைக்க வந்தனர். ஆனால் லாரி சென்றதை அறிந்து தாங்கள் ஏமாந்து விட்டதாக அரிசி மூட்டைகளை வீடுகளுக்கு எடுத்து சென்றனர்.

விழிப்புணர்வு

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் கூறும்போது, “ கவர்ச்சிகரமாக பேசி ஆசை வார்த்தைகள் கூறினால் எதையும் விற்பனை செய்து காசாக்கலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த சம்பவம் நடந்துள்ளது. இது போன்ற மோசடி பேர்வழிகளிடமிருந்து மக்கள்தான் விழிப்புணர்வுடன் இருந்து கொள்ள வேண்டும். ஏமாற்றுவோர் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் குறைய மாட்டார்கள்” என்றனர்.

Next Story