திருப்பூர் செல்லாண்டியம்மன் துறை அருகே நள்ளிரவில் நொய்யல் ஆற்றுக்குள் பாய்ந்த கார்
திருப்பூர் செல்லாண்டியம்மன் துறை அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு வந்த கார் ஒன்று நொய்யல் ஆற்றுக்குள் பாய்ந்தது. இதில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்.
திருப்பூர்,
திருப்பூர் செல்லாண்டியம்மன் துறை அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு வந்த கார் ஒன்று நொய்யல் ஆற்றுக்குள் பாய்ந்தது. இதில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்.
ஆற்றுக்குள் பாய்ந்த கார்
திருப்பூர் செல்லாண்டியம்மன் துறை அருகே, நொய்யல் ஆற்றின் கரையில் உள்ள ரோடு வழியாக நேற்று முன்தினம் நள்ளிரவில் ஒருவர் வாடகை காரை வேகமாக ஓட்டி வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் இருந்து விலகி ஆற்றை நோக்கி சென்றது. டிரைவர் சுதாரிப்பதற்குள் கார் சுமார் 30 அடி ஆழம் கொண்ட ஆற்றிற்குள் பாய்ந்தது. ஆற்றில் தண்ணீர் இல்லாததால் கார் கீழே விழுந்ததில் சேதம் அடைந்தது.
அப்போது அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் கார் ஆற்றுக்குள் பாய்ந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே ஓடி சென்று ஆற்றுக்குள் இறங்கி காருக்குள் சிக்கி இருந்த டிரைவரை மீட்டனர்.
உயிர் தப்பிய டிரைவர்
நல்லவேளையாக ஆற்றங்கரையில் வளர்ந்து நின்ற முட்செடிகளை உரசியவாறு கார் ஆற்றுக்குள் பாய்ந்ததால் காரின் வேகம் கட்டுப்படுத்தப்பட்டு டிரைவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. இதுகுறித்து தகவலறிந்த தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காரில் இருந்த நபரை அழைத்து சென்றனர். போலீசார் நடத்திய விசாரணையில், காரை ஓட்டி வந்தவர் நல்லூர் பகுதியை சேர்ந்த அழகர்சாமி (வயது 31) என்பதும், அவர் தனது நண்பரை பார்க்க காரை ஓட்டி சென்றதும் தெரியவந்தது. ஊரடங்கால் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை பரிசோதிக்காமல் ஓட்டி சென்றதால் இந்த விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். ஆற்றுக்குள் பாய்ந்த கார் பொக்லைன் எந்திரத்தின் மூலம் நேற்று மதியம் மீட்கப்பட்டது.
Related Tags :
Next Story