போளூரிலிருந்து பீகாருக்கு செல்ல காட்பாடிக்கு வந்த தொழிலாளர்கள் கலெக்டரிடம் அனுமதி பெற்று வரும்படி திருப்பி அனுப்பப்பட்டனர்
போளூரில் இருந்து பீகாருக்கு செல்ல சரக்கு ஆட்டோவில் காட்பாடிக்கு வந்த வடமாநில தொழிலாளர்கள் கலெக்டரிடம் அனுமதி வாங்கி வரும்படி போலீசார் திருப்பி அனுப்பினர்.
வேலூர்,
போளூரில் இருந்து பீகாருக்கு செல்ல சரக்கு ஆட்டோவில் காட்பாடிக்கு வந்த வடமாநில தொழிலாளர்கள் கலெக்டரிடம் அனுமதி வாங்கி வரும்படி போலீசார் திருப்பி அனுப்பினர்.
பீகார் இளைஞர்கள்
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே ஒரு கிராமத்தில் ‘ஹாலோ பிளாக்’ கற்கள் தயாரிக்கும் பணியில் பீகாரை சேர்ந்த 9 தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர். ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதில் இருந்து வேலைசெய்து வந்த அவர்களுக்கு சமீபத்தில் வேலை இல்லாத நிலை ஏற்பட்டது. இதனால் அவர்கள் தங்களது சொந்த மாநிலத்துக்கு செல்ல முடிவு செய்தனர்.
காட்பாடியில் இருந்து சிறப்பு ரெயில் செல்வதாக தகவல் அவர்களுக்கு கிடைத்தது. இதையடுத்து சரக்கு ஆட்டோவில் ‘லிப்ட்’ கேட்டு காட்பாடி ரெயில் நிலையம் சென்றனர். அங்கு பீகாருக்கு சிறப்பு ரெயில் ஏதும் செல்லவில்லை. வேறு ஒரு மாநிலத்துக்கு தான் ரெயில் செல்ல உள்ளது. அங்கிருந்த அதிகாரிகளிடம் வடமாநில தொழிலாளர்கள் பீகாருக்கு செல்ல வேண்டும் என்றனர். அதற்கு அதிகாரிகள் அனுமதி சீட்டு வேண்டும் என்றனர்.
அனுமதி சீட்டு பெற அவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். மேம்பாலம் அருகே பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசிய பின்னர் போலீசார் அந்த வடமாநில இளைஞர்களிடம் கூறுகையில், அனுமதி சீட்டு திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் தான் பெற முடியும். தற்போது பீகாருக்கு ரெயில் செல்லவில்லை என்றனர்.
அப்போது வடமாநில இளைஞர்கள் நாங்கள் சென்னைக்கு செல்கிறோம் என்றனர். அப்போது அங்கிருந்த போலீசார் சென்னைக்கு சென்றால் தனிமைப்படுத்தப்படுவீர்கள். எனவே திருவண்ணாமலைக்கு சென்று அங்கிருந்த முயற்சி செய்யுமாறு கூறினர். இதையடுத்து அவர்கள் திருவண்ணாமலைக்கு செல்வதாக கூறி அங்கிருந்து சென்றனர்.
பொருட்படுத்தாத அதிகாரிகள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகளவு கொரோனா வைரஸ் பரவி வருகிறது. மாவட்டம் முழுவதும் சுகாதாரப்பணிகள் மற்றும் தடுப்பு பணிகளை அம்மாவட்ட கலெக்டர் கந்தசாமி மேற்கொண்டு வருகிறார். திருவண்ணாமலை அருகில் உள்ள மாவட்டமான வேலூருக்கு அதிக அளவில் பொதுமக்கள் மற்றும் வடமாநிலத்தவர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில் சரக்கு ஆட்டோவில் வந்த வடமாநில தொழிலாளர்களை யாரையும் அதிகாரிகள் கொரோனா பரிசோதனை செய்யவில்லை. தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கையும் அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை. அவர்கள் வந்ததையும், பின்னர் சென்றதையும் வேலூர் மாவட்ட அதிகாரிகள் பெரிதாக பொருட்படுத்தவில்லை. ஒருவேளை அவர்களில் யாருக்காவது கொரோனா பாதிப்பு இருந்திருந்தால் வேலூரில் பரவும் வேகம் இன்னும் அதிகமாகும் என்பதில் சந்தேகமில்லை. இவ்வாறு வேலூருக்கு வருபவர்களை தனிமைப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
Related Tags :
Next Story