வேலூரில் திருமணம் செய்து கொள்ளும்படி பெண் போலீசை மிரட்டிய ஏட்டு கைது பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்


வேலூரில் திருமணம் செய்து கொள்ளும்படி பெண் போலீசை மிரட்டிய ஏட்டு கைது பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்
x
தினத்தந்தி 31 May 2020 5:22 AM GMT (Updated: 31 May 2020 5:22 AM GMT)

திருமணம் செய்து கொள்ளும்படி பெண் போலீசை மிரட்டிய ஏட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

வேலூர், 

திருமணம் செய்து கொள்ளும்படி பெண் போலீசை மிரட்டிய ஏட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆயுதப்படை பிரிவு

வேலூர் ஆயுதப்படையில் பெண் காவலராக பணியாற்றி வருபவர் நர்மதா. இவர் வேலூர் தெற்கு போலீசில் ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

நான் 2017-ம் ஆண்டு தமிழ்நாடு காவல் துறையில் பணியில் சேர்ந்து, தற்போது வேலூர் ஆயுதப்படை பிரிவில் பணிபுரிந்து வருகிறேன். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு 4 சக்கர வாகனம் ஓட்ட கற்றுக்கொள்வதற்காக மோட்டார் வாகனபிரிவு ஓட்டுனர் பணிக்காக நான் சென்றேன். அங்கு எனக்கு ஓட்டுனர் பயிற்சி அளிக்க நியமிக்கப்பட்ட ஆயுதப்படை மோட்டார் வாகன பிரிவை சேர்ந்த ஏட்டு பால்ராஜ் என்பவர் சுமார் 1 மாதம் வாகனம் ஓட்ட பயிற்சி அளித்தார். பயிற்சி முடித்த பின் நான் தற்போது ஆயுதப்படையில் ஓட்டுனராக உள்ளேன்.

இந்த நிலையில் வாகனம் ஓட்ட பயிற்சி அளித்த போது அவரிடம் நான் சகஜமாக பேசியதை தவறாக புரிந்து கொண்ட அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினார். இதற்கிடையில் கடந்த பிப்ரவரி மாதம் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இதனையடுத்து கடந்த 27-ந் தேதி அன்று காலை நான் குடியிருக்கும் ஆயுதப்படை காவலர் குடியிருப்புக்கு வந்த பால்ராஜ் என்னை தகாத வார்த்தையில் பேசினார்.

கைது

மேலும் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படியும் இல்லையென்றால் உன்னை கொன்று விடுவேன் என்றும் கொலை மிரட்டல் விடுத்தார். அப்போது அங்கு மற்றொரு காவலர் வருவதை அறிந்த பால்ராஜ் அங்கிருந்து சென்று விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியிருந்தார்.

மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து பால்ராஜை நேற்று முன்தினம் கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், இந்த பிரச்சினை தொடர்பாக பால்ராஜ் கடந்த பிப்ரவரி மாதம் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். மீண்டும் இந்த பிரச்சினை எழவே தற்போது கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து மேல்விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.

Next Story