டாஸ்மாக் கடை மேற்கூரையை உடைத்து மதுபாட்டில்கள் திருட்டு


டாஸ்மாக் கடை மேற்கூரையை உடைத்து மதுபாட்டில்கள் திருட்டு
x
தினத்தந்தி 31 May 2020 10:10 PM GMT (Updated: 31 May 2020 10:10 PM GMT)

மதுரையில் டாஸ்மாக் கடை மேற்கூரையை உடைத்து மதுபாட்டில்கள் திருடப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

மதுரை, 

மதுரை எல்லீஸ்நகர், பை-பாஸ் ரோடு சந்திக்கும் இடத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் மேற்பார்வையாளராக ஜெகதீஸ்வரன் என்பவர் வேலை பார்த்து வருகிறார். அவர் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு கடையை பூட்டிவிட்டு சென்றார். பின்னர் அவர் வழக்கம் போல் நேற்று காலை 10 மணிக்கு கடையை திறக்க வந்தார்.

அவர் கடையை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது மேற்கூரை உடைக்கப்பட்டு, மதுபான பெட்டிகள் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் இதுகுறித்து எஸ்.எஸ்.காலனி போலீசார் மற்றும் டாஸ்மாக் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் அங்கு வந்து கடையில் பதிவான கைரேகைகளை சேகரித்தனர்.

மதுபாட்டில்கள் திருட்டு

போலீசார் விசாரணையில், நள்ளிரவு மர்மநபர்கள் கடையின் மேற்கூரையை உடைத்து உள்ளே புகுந்து 4 பெட்டிகளில் இருந்த 96 மது பாட்டில்களை திருடி சென்றது தெரியவந்தது. அதன் மதிப்பு சுமார் ரூ.40 ஆயிரம் இருக்கும் என தெரிகிறது. திருடப்பட்ட மது பாட்டில்கள் அனைத்தும் விலை உயர்ந்தவை.

இதுகுறித்து எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் போலீசார் டாஸ்மாக் கடையை சுற்றியுள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.


Next Story