2 கைக்குழந்தைகளுக்கு தொற்று அறிகுறி: தென்காசியில் சுகாதார பணிகள் தீவிரம் தெருவுக்கு ‘சீல்’ வைப்பு


2 கைக்குழந்தைகளுக்கு தொற்று அறிகுறி: தென்காசியில் சுகாதார பணிகள் தீவிரம் தெருவுக்கு ‘சீல்’ வைப்பு
x
தினத்தந்தி 1 Jun 2020 5:16 AM IST (Updated: 1 Jun 2020 5:16 AM IST)
t-max-icont-min-icon

தென்காசியில் 2 கைக் குழந்தைகளுக்கு கொரோனா தொற்று அறிகுறி காணப்பட்டதை தொடர்ந்து அங்கு சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. மேலும் அந்த தெருவுக்கு நேற்று ‘சீல்‘ வைக்கப்பட்டது.

தென்காசி,

தென்காசி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தென்காசியை சேர்ந்த 63 வயதுடைய ஒரு பெண்ணிற்கு 4 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டது. இந்த பெண் வாத நோய்க்காக ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றபோது பரிசோதனையில் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவர் நெல்லை அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது வீட்டில் இருந்த 6 பேருக்கு சளி மாதிரி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதில் 2 வயது பெண் குழந்தைக்கும், 1½ வயது ஆண் குழந்தைக்கும் நோய்த்தொற்று அறிகுறி இருந்தது தெரியவந்தது. மற்ற 4 பேருக்கும் தொற்று இல்லை. இந்த இரண்டு குழந்தைகளும் ஏற்கனவே சிகிச்சை பெற்று வரும் பெண்ணின் பேரக்குழந்தைகள் ஆவார்கள்.

இந்த 2 குழந்தைகளையும் நேற்று மதியம் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இவர்கள் வசித்த தெருவுக்கு சுகாதாரத்துறை மற்றும் நகராட்சி அலுவலர்கள் ‘சீல்‘ வைத்தனர். அந்த பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளித்து சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது.

மேலும் இந்த பகுதி அருகிலுள்ள கீழப்புலியூரிலும் முழுமையாக கிருமிநாசினி தெளிக் கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) ஹசீனா, சுகாதார அலுவலர் முகமது இஸ்மாயில் ஆகியோர் செய்தனர். கைக்குழந்தைகளுக்கு கொரோனா தொற்று அறிகுறி காணப்பட்டது அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story