கோவில்பட்டியில் 1,425 ஏழைகளுக்கு நிவாரண பொருட்கள் அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்


கோவில்பட்டியில் 1,425 ஏழைகளுக்கு நிவாரண பொருட்கள் அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்
x
தினத்தந்தி 31 May 2020 11:51 PM GMT (Updated: 31 May 2020 11:51 PM GMT)

கோவில்பட்டியில் 1,425 ஏழைகளுக்கு நிவாரண பொருட்களை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.

கோவில்பட்டி,

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளதால், பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு பல்வேறு தரப்பினரும் நிவாரண பொருட்களை வழங்கி உதவி வருகின்றனர். கோவில்பட்டி மெயின் ரோடு தட்சணமாற நாடார் சங்க பேட்டை வளாகத்தில், தட்சணமாற நாடார் சங்கம் சார்பில், ஏழைகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 1,000 ஏழைகளுக்கு அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார்.

தட்சணமாற நாடார் சங்க தலைவர் காளிதாசன், செயலாளர் சண்முகவேல், துணை செயலாளர் ரத்தினராஜ், தெற்கு கள்ளிக்குளம் தட்சணமாற நாடார் சங்க கல்லூரி ஆட்சிக்குழு தலைவர் கணேசன், உறுப்பினர்கள் ராமர், பால்ராஜ், நாடார் உறவின்முறை சங்க தலைவர் பழனிசெல்வம், யூனியன் துணை தலைவர் பழனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் கோவில்பட்டி தனியார் மண்டபத்தில், பூக்கட்டும் தொழிலாளர்கள், சைக்கிள் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் உள்பட 425 ஏழை குடும்பத்தினருக்கு தேவையான அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.

பின்னர் அவர், சூறைக்காற்றில் ஆவின் பாலகம் சேதம் அடைந்ததால் பாதிக்கப்பட்ட நாலாட்டின்புத்தூரைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி ரவிச்சந்திரனுக்கு (வயது 42) தனது சொந்த நிதியில் இருந்து ரூ.10 ஆயிரம் நிதி உதவி வழங்கினார்.

தொடர்ந்து கோவில்பட்டி மெயின் ரோடு, மார்க்கெட் ரோடு சந்திப்பு பகுதியில் புதிதாக கட்டப்படும் பாலத்தை அமைச்சர் கடம்பூர் ராஜூ பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பாலம் அமைக்கும் பணிகளை விரைந்து நிறைவேற்றுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, தாசில்தார் மணிகண்டன், அ.தி.மு.க. நகர செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் ராமச்சந்திரன், யோகீசுவரர் உறவின்முறை சங்க தலைவர் ஆனந்த் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Next Story