கூடுவாஞ்சேரி அருகே சென்னையை சேர்ந்த தொழிலாளி வெட்டிக்கொலை


கூடுவாஞ்சேரி அருகே சென்னையை சேர்ந்த தொழிலாளி வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 1 Jun 2020 5:55 AM IST (Updated: 1 Jun 2020 5:55 AM IST)
t-max-icont-min-icon

கூடுவாஞ்சேரி அருகே சென்னையைச் சேர்ந்த தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் தைலாவரம் கிராமத்தில் ரெயில்வே தண்டவாளம் அருகே நேற்று காலை ஆண் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடப்பதாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், கூடுவாஞ்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் கொலை செய்யப்பட்டு கிடந்த நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்ட நபர் சென்னை எண்ணூர் அன்னை சிவகாமி நகரைச் சேர்ந்த ரமேஷ் (வயது 33) என்பதும், கட்டிடத்தொழிலாளி என்பதும் தெரியவந்தது.

கொலை செய்யப்பட்ட ரமேஷ் மீது சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் 20-க்கும் மேற்பட்ட திருட்டு, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. சமீபத்தில் சிறையில் இருந்து வெளியே வந்த ரமேஷ், சிறையில் தனக்கு பழக்கமான கூடுவாஞ்சேரியை அடுத்த தைலாவரம் பகுதியைச் சேர்ந்த தனது நண்பர் வீட்டில் தங்கி இருந்தார்.

அப்போது அவரை முன்விரோதம் காரணமாக யாராவது வெட்டி படுகொலை செய்தார்களா அல்லது மது குடிக்கும்போது நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் வெட்டி கொலை செய்யப்பட்டாரா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், வண்டலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் ஆகியோர் நேரில் சென்று கொலை நடந்த இடத்தை பார்வையிட்டு அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தனர்.

கொலையாளிகளை பிடிக்க கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

Next Story