புதுவையில் 8-ந்தேதி முதல் வழிபாட்டுத் தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி; கடற்கரை பூங்காக்கள் இன்று முதல் திறப்பு


புதுவையில் 8-ந்தேதி முதல் வழிபாட்டுத் தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி; கடற்கரை பூங்காக்கள் இன்று முதல் திறப்பு
x
தினத்தந்தி 1 Jun 2020 6:54 AM IST (Updated: 1 Jun 2020 6:54 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் இன்று முதல் கடற்கரை பூங்காக்கள் திறக்கப்படுகின்றன. ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிடலாம். கடைகளை திறக்கும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. வழிபாட்டுத்தலங்களில் 8-ந்தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று முதல்- அமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி,

கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி புதுவையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அமைச்சரவை கூட்டம் இந்தநிலையில் ஜூன் 30-ந்தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு அறிவித்தது. இதில் பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.

இதையடுத்து புதுவையில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து நேற்று மாலை கேபினட் அறையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு முதல்- அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார்.

இதில் அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன், தலைமைச் செயலாளர் அஸ்வனி குமார், அரசு செயலாளர்கள் சுர்பீர்சிங், பிரசாந்த் குமார் பாண்டா, ஜூலியட் புஷ்பா, கலெக்டர் அருண் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்ததும் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

ஊரடங்கு உத்தரவை ஜூன் மாதம் 30-ந் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. அதன்படி இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். ஏற்கனவே கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது கடைகளின் திறப்பு நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை கடைகளை திறந்து வைக்கலாம்.

வழிபாட்டுத் தலங்களில் பக்தர்களை அனுமதிக்க கோரி பிரதமருக்கு கடிதம் எழுதினேன். அதன்படி வரும் 8-ந் தேதி முதல் வழிபாட்டுத்தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும். ஆனால் பக்தர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டியது அவசியமாகும்.

அதேபோல் ஓட்டல்களில் உணவுப் பண்டங்களை பார்சலில் மட்டுமே தர வேண்டும். ஆனால் அமர்ந்து சாப்பிட தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு வரும் 8-ந்தேதி முதல் பொதுமக்கள் ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிடலாம். வணிக வளாகமும் அன்றைய தினம் திறக்க அனுமதிக்கப்படுகிறது.

பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும். பள்ளி, கல்லூரிகளை மீண்டும் திறப்பது தொடர்பாக மாநில அரசுகளிடம் மத்திய அரசு கருத்து கேட்கிறது. நாங்களும் கல்வியாளர்களின் பரிந்துரைகளை மத்திய அரசுக்கு தெரிவிப்போம். புதுச்சேரியில் விமான சேவைகளை தொடங்கவும் அனுமதி அளிப்போம்.

புதுச்சேரி கடற்கரை பூங்காக்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் திறக்கப்படும். சினிமா தியேட்டர்கள், உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளம், மது பார்களை திறக்க அனுமதி இல்லை. மாநிலங்களுக்கிடையே மக்கள் தடையின்றி செல்ல மத்திய அரசு அனுமதித்துள்ளது. ஆனால் நாம் எல்லைப் பகுதியை தற்போது கட்டுப்படுத்தி வைத்துள்ளோம். அத்தியாவசிய தேவையின்றி பிற மாநிலத்தவர்கள் புதுச்சேரிக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.

விழுப்புரம், கடலூர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மருத்துவம், தொழிற்சாலை பணிகள், விவசாய பணிக்காக புதுச்சேரிக்கு வரலாம். இதுதொடர்பாக அந்த மாவட்ட கலெக்டருடன் புதுச்சேரி கலெக்டர் ஆலோசனை நடத்தி விதிமுறைகளை வகுப்பார். அந்த மாவட்டங்களில் இருந்து வருபவர்களை பரிசோதிக்க மருத்துவக் குழுக்களை நியமித்துள்ளோம். புதுச்சேரிக்குள் பஸ்களை இயக்கலாம். தொழிற்சாலைகள் 100 சதவீத பணியாளர்களை கொண்டு பணி செய்யலாம். அரசு ஊழியர்கள் 50 சதவீதம் பேர் பணி செய்யலாம்.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Next Story