முழு ஊதியம் வழங்கக்கோரி போக்குவரத்துக்கழக பணிமனைகள் முன்பு தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
முழு ஊதியம் வழங்கக்கோரி போக்குவரத்துக்கழக பணிமனைகள் முன்பு தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊட்டி,
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் அரசு பஸ் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. அனைத்து போக்குவரத்து தொழிலாளர்களுக்கும் முழுமையான ஊதியம் வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்டு உள்ளது. அதன் அடிப்படையில் கடந்த ஏப்ரல் மாதம் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மே மாதம் முழுமையான ஊதியத்தை வழங்க வலியுறுத்தி பணிமனைகளில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்தது.
காத்திருப்பு போராட்டம்
அதன்படி நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அரசு பஸ் டிரைவர்கள், நடத்துனர்கள் சீருடை அணிந்து கோரிக்கையை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டம் நடத்த நேற்று காலை மத்திய பஸ் நிலையத்துக்கு வந்தனர். பணிமனைக்குள் சென்று போராட்டம் நடத்தாமல் இருக்க நுழைவுவாயில் அடைக்கப்பட்டு இருந்தது.
இதனால் தொழிலாளர்கள் பணிமனை முன்பு முழு ஊதியம் வழங்கக்கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் போக்குவரத்து கழக நிர்வாகத்தின் நடவடிக்கையை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏ.ஐ.டி.யு.சி. கிளை துணைத்தலைவர் நசீர் மற்றும் எல்.பி.எப். தொழிற்சங்கத்தினர் கலந்துகொண்டனர்.
தன்னிச்சையாக முடிவு
இதுகுறித்து சி.ஐ.டி.யு. மண்டல துணை பொதுச்செயலாளர் கணேஷ் கூறும்போது, மே மாத ஊதியம் வழங்கும்போது கடந்த ஆண்டு சராசரி அடிப்படையில் வருகை பதிவேடு வழங்குவது, மீதி நாட்களை சொந்த விடுப்பில் கழிப்பது, விடுப்பு இல்லாவிட்டால் சம்பளம் இல்லா விடுப்பாக கருதி சம்பளத்தை கொடுக்காமல் இருப்பது என்ற அடிப்படையில் போக்குவரத்து கழகம் தன்னிச்சையாக முடிவு செய்து சம்பள பட்டியல் தயாரித்து உள்ளது. இதுபோன்ற தவறான நடவடிக்கையை கண்டித்தும், முழுமையான ஊதியத்தை வழங்க வலியுறுத்தியும் போராட்டம் நடந்தது. அரசு அறிவித்து உள்ள எந்தவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்யாமல் வழக்கமான முறையிலேயே செயல்பாடு உள்ளது. மே மாதத்திற்கு எவ்வித பிடித்தமும் இன்றி அரசு அறிவித்த அடிப்படையில் முழுமையாக ஊதியத்தை வழங்க வேண்டும் என்றார். அதேபோல் குன்னூர், கோத்தகிரி, கூடலூர் பணிமனைகள் முன்பு காத்திருப்பு போராட்டம் நடந்தது.
Related Tags :
Next Story