மாற்று இடம் வழங்கும் திட்டத்தின் கீழ் 3-வது கட்ட பணிகள் தொடர்பாக முதுமலை மக்களிடம், அதிகாரிகள் ஆலோசனை
மாற்று இடம் வழங்கும் திட்டத்தின் கீழ் 3-வது கட்ட பணிகள் தொடர்பாக முதுமலை மக்களிடம் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
கூடலூர்,
கூடலூர் தாலுகாவிற்கு உட்பட்ட முதுமலை ஊராட்சியானது புலிகள் காப்பக வனத்துக்குள் உள்ளது. இங்கு பல தலைமுறைகளாக வனத்துக்குள் மக்கள் வாழ்வதால், அவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் கடந்த 2007-ம் ஆண்டு மாற்று இடம் வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. இதில் பயன் பெற ஊராட்சிக்கு உட்பட்ட பெண்ணை, நெல்லிக்கரை, நாகம்பள்ளி, மண்டக்கரை, புலியாளம், முதுகுளி உள்பட 7 கிராமங்களில் சுமார் 700 பேரை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. மேலும் அவர்கள் வெளியேற்றப்பட்டு குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் அல்லது முதுமலையில் கைவசம் வைத்துள்ள நிலத்துக்கு ஏற்ப மாற்று இடம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதையொட்டி பந்தலூர் தாலுகா சன்னக்கொல்லி பகுதியில் அவர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டது. முதற்கட்டமாக 235 பயனாளிகளும், 2-வது கட்டமாக 255 பயனாளிகளும் சன்னக்கொல்லியில் குடியமர்த்தப்பட்டனர். மேலும் பலர் தலா ரூ.10 லட்சம் நிதியை பெற்று கொண்டு வெளியிடங்களில் குடியேறினர்.
3-வது கட்டம்
இந்த நிலையில் 3-வது கட்டமாக பயனாளிகளை தேர்வு செய்யும் பணி நடைபெற்றது. இதில் 211 பேரை வருவாய் மற்றும் வனத்துறையினர் கணக்கெடுத்து தேர்வு செய்து உள்ளனர். அவர்களை மாற்று இடம் வழங்கும் திட்டத்தின் கீழ் வெளியேற்றி மறுகுடியமர்த்துவது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். இது குறித்த ஆலோசனை கூட்டம், முதுமலை ஊராட்சி முதுகுளி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கூடலூர் ஆர்.டி.ஓ. ராஜ்குமார் தலைமையில் தாசில்தார் சங்கீதாராணி, முதுமலை புலிகள் காப்பக வனச்சரகர் தயானந்தன், சுரேஷ் உள்பட வருவாய் மற்றும் வனத்துறையினர் கலந்து கொண்டனர். இதேபோன்று முதுகுளி, நம்பிக்குன்னு, குண்டித்தாள் உள்ளிட்ட பகுதி மக்கள் பங்கேற்றனர்.
விவசாயத்துக்கு ஏற்ற...
அப்போது மாற்று இடம் வழங்கும் திட்டத்தில் பலரது பெயர் விடுபட்டு உள்ளதாக அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அதற்கு, எழுத்துப்பூர்வமாக விண்ணப்பித்தால் பரிசீலிக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர். ஆனால் முதுகுளி, நம்பிக்குன்னு, குண்டித்தாள் பகுதியை சேர்ந்த மக்கள் 3-வது கட்ட பணிகளுக்கு ஒத்துழைக்க மாட்டோம் என்றனர். மேலும் விவசாயத்துக்கு ஏற்ற மாற்று இடம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதற்கு அதிகாரிகள், எழுத்துப்பூர்வமாக விண்ணப்பித்தால், உயர் அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து கூட்டம் நிறைவு பெற்றது.
Related Tags :
Next Story