கூடலூரில் ஆற்று வாய்க்காலை தூர்வாரும் பணி மும்முரம்
கூடலூரில் ஆற்று வாய்க்காலை தூர்வாரும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
கூடலூர்,
கேரளாவில் தென்மேற்கு பருவமழை விரைவில் தொடங்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. இதையொட்டி நீலகிரி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட நிர்வாகம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது. கூடலூர் பகுதியில் மழையின் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் பருவமழைக்காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது. இதனால் ஆதிவாசிகள் உள்பட பொதுமக்கள் முகாம்களில் தங்க வைக்கப்படுகின்றனர்.
கூடலூர் ராஜகோபாலபுரம் முதல் காசிம்வயல், துப்புக்குட்டிபேட்டை, 1-ம் மைல் வழியாக பாண்டியாறுக்கு ஆற்று வாய்க்கால் செல்கிறது. மழைக்காலத்தில் வாய்க்காலில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி பொதுமக்களின் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராஜகோபாலபுரம் முதல் துப்புக்குட்டிபேட்டை வரை சுமார் 1,800 மீட்டர் தூரம் வாய்க்காலை தூர்வார திட்டமிடப்பட்டது. இதற்காக ரூ.6 லட்சம் நகராட்சி நிதியில் இருந்து ஒதுக்கப்பட்டது.
தூர்வாரும் பணி மும்முரம்
தற்போது பொக்லைன் எந்திரம் கொண்டு ஆற்று வாய்க்காலை தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் தண்ணீர் சீராக செல்லும் வகையில் பல இடங்களில் வாய்க்கால் அகலப்படுத்தும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியை நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன், பொறியாளர் பார்த்தசாரதி, பணி மேற்பார்வையாளர் பிரபாகரன் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து பணியை விரைவாக முடிக்க உத்தரவிட்டனர்.
இதேபோல் வாய்க்காலில் பொதுமக்கள் குப்பை கழிவுகள் கொட்டக்கூடாது. அவ்வாறு மீறி கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.
நடவடிக்கை
இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன் கூறியதாவது:-
கூடலூர் நகரின் மையப்பகுதியில் செல்லும் ஆற்று வாய்க்காலில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். தொடர்ந்து குப்பைகள் கொட்டினால் மழைக்காலத்தில் வாய்க்காலில் அடைப்புகள் ஏற்பட்டு, வீடுகளை வெள்ளம் சூழ்ந்து விட வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தற்போது ரூ.6 லட்சம் செலவில் 1,800 மீட்டர் தூரம் வாய்க்கால் அகலப்படுத்துதல் மற்றும் தூர்வாருதல் உள்ளிட்ட பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து குப்பை கழிவுகள் ஆற்றுவாய்க்காலில் கொட்டுவது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story