இன்று முதல் ரெயில் சேவை: விழுப்புரத்தில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது


இன்று முதல் ரெயில் சேவை: விழுப்புரத்தில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது
x
தினத்தந்தி 1 Jun 2020 3:46 AM GMT (Updated: 1 Jun 2020 3:46 AM GMT)

ரெயில் சேவை இன்று முதல் தொடங்க உள்ள நிலையில் விழுப்புரம் ரெயில் நிலையத்தில் நேற்று முதல் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.


விழுப்புரம்,

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கு 5-வது கட்டத்தை எட்டி இருக்கிறது. தற்போது பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, பொது போக்குவரத்தும் தொடங்க உள்ளது.

அந்த வகையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ள சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் ரெயில்களை இயக்கலாம் என்று தென்னக ரெயில்வேக்கு தமிழக அரசு சமீபத்தில் கடிதம் எழுதியிருந்தது. இதை தொடர்ந்து தமிழகத்தில் 4 முக்கிய வழித்தடங்களில் ரெயிலை இயக்க ரெயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.

கோவை-மயிலாடுதுறை (செவ்வாய்க்கிழமை தவிர), மதுரை-விழுப்புரம் சிறப்பு விரைவு ரெயில், திருச்சி-நாகர்கோவில் விரைவு ரெயில், கோவை-காட்பாடி விரைவு ரெயில் ஆகிய ரெயில்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் இயக்கப்பட உள்ளன.

மதுரையில் இருந்து தினசரி காலை 7 மணிக்கு புறப்படும் சிறப்பு விரைவு ரெயில் திண்டுக்கல், திருச்சி, அரியலூர், வழியாக விழுப்புரம் வந்து அடையும். இதேபோல விழுப்புரத்தில் இருந்து தினசரி மாலை 4 மணிக்கு புறப்படும் சிறப்பு விரைவு ரெயில் அரியலூர், திருச்சி, திண்டுக்கல் வழியாக மதுரைக்கு இரவு 9.20 மணிக்கு சென்றடையும். இந்த சிறப்பு ரெயிலில் 22 பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன.

இந்த ரெயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கி உள்ளது. இதில் விழுப்புரம் ரெயில் நிலையத்தில் நேற்று முன்தினம் மாலை முதல் டிக்கெட் முன்பதிவு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், திட்டமிட்டபடி தொடங்கவில்லை.

பயணிகளிடையே சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் அங்கு தேவையான முன்னேற்பாடுகள் செய்யும் பணி நடந்ததால், திட்டமிட்டபடி தொடங்க முடியாமல் போனது. இந்த நிலையில் நேற்று காலை முதல் முன்பதிவு தொடங்கியது. 500-க்கும் மேற்பட்டவர்கள் முன்பதிவு செய்தனர். அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடித்தே டிக்கெட்டு களை முன்பதிவு செய்தனர். இதில் பலர் திருச்சி மற்றும் மதுரைக்கு செல்ல முன்பதிவு செய்தனர்.

Next Story