மாவட்டம் முழுவதும் அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் போராட்டம்
மாவட்டம் முழுவதும் அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்,
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், தமிழகத்தில் கடந்த 2 மாதங்களாக பஸ் போக்குவரத்து நடைபெறவில்லை. இதற்கிடையே ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை தொடர்ந்து, இன்று (திங்கட்கிழமை) முதல் பஸ்களை இயக்குவதற்கு அரசு அனுமதி அளித்தது. மேலும் நகர், புறநகர்களுக்கு மண்டலங்களுக்குள் மட்டுமே பஸ்கள் இயக்கப்படுகிறது.
இதைத்தொடர்ந்து அரசு பஸ்களை இயக்குவதற்காக மாநிலம் முழுவதும் அரசு போக்குவரத்து பணிமனைகளில் முன்னேற்பாடு பணிகள் நேற்று தொடங்கின. இதற்கிடையே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துக்கழக தொழிற்சங்கங்கள் சார்பில் பணிமனையில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
தொழிலாளர்கள் போராட்டம்
இதையடுத்து திண்டுக்கல், பழனி, வத்தலக்குண்டு, நத்தம், வேடசந்தூர் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள 9 போக்குவரத்து பணிமனைகள் முன்பும் போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் பணிமனைக்குள் தொழிலாளர்கள் நுழையாத வகையில் நுழைவுவாயில் பூட்டப்பட்டது. இதற்கிடையே 9 பணிமனைகள் முன்பும் போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஊரடங்கு காலத்துக்கு சிறப்பு விடுப்பு வழங்க வேண்டும். தொழிலாளர்களின் சொந்த விடுப்பை கழிக்கக்கூடாது. மேலும் தொழிலாளர்களின் சம்பளத்தை குறைக்கக்கூடாது. அதேபோல் அனைத்து தொழிலாளர்களுக்கும் கையுறை, முக கவசம், கிருமிநாசினி மருந்து உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால் அரசு போக்குவரத்துக்கழக பணிமனைகளில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story