ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலம் பருத்தியை கொள்முதல் செய்ய வேண்டும்; விவசாயிகள் கோரிக்கை


ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலம் பருத்தியை கொள்முதல் செய்ய வேண்டும்; விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 1 Jun 2020 9:59 AM IST (Updated: 1 Jun 2020 9:59 AM IST)
t-max-icont-min-icon

ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலம் பருத்தியை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோட்டூர்,

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் வட்டாரத்தில் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின் மோட்டார் பம்பு செட் மூலம் 480 எக்டேர் வரை இந்த ஆண்டு விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்துள்ளனர்.

இப்பகுதி விவசாயிகள் மே மாதம் கடைசி வாரம் முதல் அறுவடை செய்த பஞ்சுகளை விற்க முடியாமலும் பாதுகாக்க போதிய இடவசதி இல்லாமலும் அவதிப்பட்டு வருகிறார்கள். 10 ஆயிரம் டன்னுக்கு மேல் பஞ்சு விற்க முடியாமல் ‘வயல்வெளிகளிலும் வீடுகளிலும் தேங்கி கிடக்கிறது. இதனால் விவசாயிகளுக்கு பொருளாதார நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.

எனவே ஒழுங்கு முறை விற்பனை கூடத்தை திறந்து பருத்தி சாகுபடி செய்துள்ள விவசாயிகளிடம் இருந்து பஞ்சை தமிழக அரசு உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

கோடை சாகுபடியில் நெல்லுக்கு மாற்றாக கரும்பு சாகுபடி செய்து வந்தோம். கரும்பை அறுவடை செய்து விற்பதிலும் பணம் பெறுவதிலும் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டது. தற்போது பருத்தி சாகுபடி செய்து வருகிறோம். கடந்த ஆண்டு பருத்தி பஞ்சு நல்ல விலை போனது. இதை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு விவசாயிகள் மிகுந்த ஆர்வத்துடன் பருத்தி சாகுபடி செய்தனர். மேலும் வேளாண்மை துறை மூலம் பருத்தி சாகுபடியை ஊக்கப்படுத்தும் வகையில் 50 சதவீத மானியத்தில் நுண்ணூட்ட கலவை வழங்கப்பட்டது.

இதை பயன்படுத்தியதால் மகசூல் அதிகரித்துள்ளது. முன் கட்ட சாகுபடி செய்த பருத்தி மே 15-ந் தேதி முதல் அறுவடை தொடங்கியது. 100-க்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் 10 ஆயிரம் டன் வரை அறுவடை செய்த பஞ்சு விற்பனை ஆகாமல் தேங்கி கிடக்கிறது. இந்த பஞ்சை பாதுகாத்து வைக்க இடம் இல்லாமல் விவசாயிகள் வீடுகளில் கொட்டி வைத்துள்ளனர். மேலும் வயல்களில் மூட்டை மூட்டையாக கட்டியும் வைத்துள்ளனர். திடீரென மழை வந்தால் பருத்தி மூட்டைகள் நனைந்து அனைத்தும் வீணாகி விடும்.

எனவே சம்பந்தபட்ட துறை அதிகாரிகள் ஒழுங்கு முறை விற்பனை கூடங்களை திறந்து விவசாயிகளிடம் உள்ள அனைத்து பஞ்சுகளையும் கொள்முதல் செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story