கம்பத்தில் குளத்தில் மிதக்கும் பிளாஸ்டிக் குப்பைகள் சுகாதாரக்கேட்டால் நோய் பரவும் அபாயம்


கம்பத்தில் குளத்தில் மிதக்கும் பிளாஸ்டிக் குப்பைகள்   சுகாதாரக்கேட்டால் நோய் பரவும் அபாயம்
x
தினத்தந்தி 1 Jun 2020 4:42 AM GMT (Updated: 2020-06-01T10:12:08+05:30)

கம்பத்தில் உள்ள வீரப்பநாயக்கன்குளத்தில் அதிக அளவில் பிளாஸ்டிக் குப்பைகள் மிதக்கின்றன. சுகாதாரக்கேட்டால் நோய் பரவும் அபாயம் உள்ளது.

கம்பம், 

தேனி மாவட்டம், கம்பத்தில் வீரப்பநாயக்கன்குளம், ஒடப்படிகுளம், ஒட்டுக்குளம் ஆகிய குளங்கள் உள்ளன. இந்த குளங்களுக்கு முல்லைப்பெரியாற்றில் இருந்து தண்ணீர் வருகிறது. இந்த குளங்கள் மூலம் கம்பம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இதில் வீரப்பநாயக்கன் குளத்தில் கம்பம் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நேரடியாக கலக்கிறது. இதை தடுக்க வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது. அதேநேரத்தில் இந்த குளம் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால், குளத்தில் அதிக அளவில் மண் படிந்துள்ளது.

தூர்வார நடவடிக்கை

பிளாஸ்டிக் குப்பைகள் குளத்துக்குள் குவிந்து கிடக்கிறது. அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசி சுற்றுச்சூழல் மாசுபட்டு வருகிறது. சுகாதாரக்கேட்டால் நோய் பரவும் அபாயமும் உள்ளது. விரைவில் முல்லைப்பெரியாற்றில் இருந்து இந்த குளத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது. அவ்வாறு தண்ணீர் திறக்கப்பட்டால் குளத்தின் தண்ணீர் விவசாய பயன்பாட்டுக்கு திறக்கப்படும். இதனால், இங்கு தண்ணீரில் மிதக்கும் பிளாஸ்டிக் குப்பைகள் வயல்வெளிகளுக்கு சென்று விளைச்சல் பாதிக்கவும், மண்வளம் கெட்டுப்போகவும் வாய்ப்புகள் உள்ளன.

எனவே, அதற்குள் போர்க்கால அடிப்படையில் குளத்தில் கிடக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. அத்துடன் இந்த குளத்தை தூர்வாரவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் விவசாயிகளின் வலியுறுத்தலாக உள்ளது.

Next Story