போலீஸ்காரரை தாக்கிய விவகாரம்: மேலும் 2 பேர் கைது
திருப்பூரில் போலீஸ்காரரை தாக்கிய விவகாரத்தில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
அனுப்பர்பாளையம்,
திருப்பூர் 15 வேலம்பாளையம் போலீஸ் நிலையத்தில் போலீஸ் காரராக பணியாற்றி வருபவர் நல்லசாமி. இவர் கடந்த 8-ந்தேதி அனுப்பர்பாளையத்தை அடுத்த திலகர்நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். மாலை 5 மணிக்கு கடை மூடும் நேரத்தில் 2 பேர் முககவசம் அணியாமல் மது வாங்க சென்றுள்ளனர். அப்போது இருவரையும் தடுத்து நிறுத்திய போலீஸ்காரர் நல்லசாமி, முககவசம் அணியாமல் இருந்ததாலும், மது விற்கும் நேரம் முடிந்தது என்பதாலும் மது வாங்க முடியாது என்று கூறி உள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த 2 பேரும் போலீஸ்காரரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் பணி முடிந்ததும், போலீஸ் நிலையம் செல்வதற்காக நல்லசாமி மோட்டார்சைக்கிளை எடுக்க சென்றுள்ளார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 10 பேர் கொண்ட மர்ம கும்பல் நல்லசாமியிடம் தகராறில் ஈடுபட்டதுடன், இரும்புக்கம்பி, குழாயால் அவரை பயங்கரமாக தாக்கினார்கள். இதில் படுகாயமடைந்த போலீஸ்காரர் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
போலீசில் புகார்
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த 15 வேலம்பாளையம் போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை கைப்பற்றி, தாக்குதலில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர்.
இது தொடர்பாக திருப்பூர் ஆத்துப்பாளையத்தை சேர்ந்த கார்த்திக் (வயது 21), மாடசாமி (24) அண்ணாநகரை சேர்ந்த ராஜேஷ் (25) மற்றும் 15 வேலம்பாளையம் கரியகாளியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த கிரி என்கிற வேதகிரி (26) ஆகிய 4 பேரை போலீசார் ஏற்கனவே கைது செய்தனர்.
மேலும் 2 பேர் கைது
தலைமறைவாக இருந்த 6 பேரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய அனுப்பர்பாளையம் கோகுலம் காலனியை சேர்ந்த பாலாஜி (25), மனோஜ் (22) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் திருப்பூர் ஜே.எம்.3 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story