ஊரடங்கால் வேலை இல்லை: குடும்ப செலவுக்காக நகையை விற்ற தொழிலாளி தற்கொலை மனைவி கோபித்து கொண்டதால் விபரீத முடிவு
கொரோனா ஊரடங்கால் வேலை இல்லாததால் குடும்ப செலவுக்காக மனைவியின் நகையை தொழிலாளி ஒருவர் விற்றார். நகையை விற்றதை மனைவி கோபித்து கொண்டதால் தூக்குப்போட்டு அவர் தற்கொலை செய்து கொண்டார்.
பல்லடம்,
பல்லடம் அருகே உள்ள மாதேஸ்வரன் நகரை சேர்ந்தவர் மோகனசுந்தரம்(வயது 34). திருப்பூரில் உள்ள தனியார் பிரிண்டிங் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.இவருடைய மனைவி வீரதாரணி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். ஊரடங்கால் மோகன சுந்தரம் வேலை இல்லாமல் இருந்து வந்தார். இதனால் குடும்பம் நடத்துவதற்கு மிகவும் சிரமப்பட்டார்.
இதனால் குடும்பம் நடத்துவதற்காக தனது மனைவியின் நகையை நேற்று முன்தினம் மோகன சுந்தரம் விற்று உள்ளார். பின்னர் நகை விற்ற பணத்தில் வீட்டுக்கு தேவையான அரிசி, பருப்புகளை வாங்கி வந்து உள்ளார். இந்த நிலையில் அரிசி, பருப்புக்கு யார் காசு தந்தார்கள் என மனைவி கேட்ட பொழுது நகையை விற்றதை தெரிவித்து உள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது.
வீரதாரணி தனது கணவருடன் கோபித்து கொண்டு தனது குழந்தைகளுடன் மாமியார் அறைக்கு சென்று படுத்து கொண்டார். நேற்று காலை தூங்கி எழுந்ததும் காப்பியுடன் கணவர் இருந்த அறை கதவை தட்டினார். கதவு திறக்கப்படவில்லை.
தூக்கில் தொங்கினார்
பின்னர் ஜன்னல் கதவை திறந்து பார்த்தார். வீட்டின் அறைக்குள் விட்டத்தில் மோகன சுந்தரம் தூக்கில் தொங்கினார். அதை பார்த்து வீரதாரணி அலறியவாறே அதிர்ச்சி அடைந்து கீழே விழுந்தார். உடனே அக்கம், பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். பின்னர் இது குறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்தும் போலீசார் விரைந்து வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது மோகனசுந்தரம் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
Related Tags :
Next Story