பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் இன்று முதல் 50 சதவீத அரசு பஸ்கள் இயக்கம் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டது
பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் இன்று முதல் 50 சதவீத அரசு பஸ்கள் இயக்கப்படவுள்ளது.
பெரம்பலூர்,
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு கடந்த 2 மாதத்துக்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால், போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வாகனங்கள் இயக்கப்பட்டன. பஸ்கள் அனைத்தும் டெப்போக்களில் நிறுத்தப்பட்டதால் பஸ் நிலையங்கள் தற்காலிகமாக காய்கறி சந்தைகளாக மாற்றப்பட்டன.
இந்தநிலையில் நேற்றுடன் ஊரடங்கு உத்தரவு நிறைவு பெற்ற நிலையில், கொரோனா தொற்று அதிகம் உள்ள சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை தவிர, பிற மாவட்டங்களில் 50 சதவீதம் போக்குவரத்தை இன்று(திங்கட்கிழமை) முதல் தொடங்கலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் இன்று முதல் போக்குவரத்து தொடங்குகிறது.
பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து 47 பஸ்களும், அரியலூரில் இருந்து 40 பஸ்களும், ஜெயங்கொண்டத்தில் இருந்து 45 பஸ்களும் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் அனைத்தும் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்படும்.
கிருமி நாசினி
பஸ்கள் இயக்கப்படுவதையொட்டி பெரம்பலூர், அரியலூர், ஜெயங்கொண்டம் அரசு போக்குவரத்து பணிமனைகளில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பஸ்கள் பழுது பார்க்கப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. பணிமனை நுழைவு வாயில்களில் பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் கைகளை கழுவதற்கு கிருமி நாசினி மற்றும் சோப்பு ஆயில் நிரப்பப்பட்ட பெடல் எந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு முககவசங்கள், கையுறைகளும் வழங்கப்படுகின்றன.
முக கவசம் கட்டாயம்
இதுகுறித்து பெரம்பலூர் அரசு போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் ஞானமூர்த்தி கூறுகையில், அரசு பஸ்களில் 60 சதவீத பயணிகள் மட்டும் ஏற்றப்படுவார்கள். பயணிகள் முக கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். பெரம்பலூரில் இருந்து அரியலூர், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு இடையே மட்டுமே பஸ்கள் இயக்கப்படும். அரியலூர், ஜெயங்கொண்டம் அரசு போக்குவரத்து பணிமனைகளில் இருந்து பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கிடையே மட்டும் பஸ்கள் இயக்கப்படவுள்ளது. மேலும், தனியார் பஸ்களும் இயக்கப்படவுள்ளது. ஒரு மண்டலத்தில் இருந்து அடுத்த மண்டலத்தின் எல்லை வரை பஸ்கள் இயக்கப்படும். அரசு பஸ்களில் பழைய கட்டணமே வசூலிக்கப்படும். மண்டலத்திற்குள் இ-பாஸ் இன்றி பொதுமக்கள் பயணம் செய்யலாம் என்றார்.
Related Tags :
Next Story