மாவட்டத்தில் இன்று முதல் 50 சதவீத பஸ்கள் இயக்கம் முக கவசம் அணிந்த பயணிகளுக்கு மட்டுமே அனுமதி


மாவட்டத்தில் இன்று முதல் 50 சதவீத பஸ்கள் இயக்கம்  முக கவசம் அணிந்த பயணிகளுக்கு மட்டுமே அனுமதி
x
தினத்தந்தி 1 Jun 2020 11:31 AM IST (Updated: 1 Jun 2020 11:31 AM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்டத்தில் இன்று முதல் 50 சதவீத பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில், முக கவசம் அணிந்த பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூர்,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் பஸ், ரெயில், விமானம் உள்ளிட்ட பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் வசித்து வருபவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் பரிதவித்து வந்தனர்.

இதனால் தமிழகத்தில் எப்போது பஸ்கள் ஓடும் என பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவியது. இந்தநிலையில், 5-ம் கட்டமாக ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதேசமயம் தமிழகத்தில் பஸ் போக்குவரத்து வசதிக்காக 8 மண்டலங்களாக பிரித்து, குறிப்பிட்ட மண்டலங்களில் மட்டும் இன்று முதல் (திங்கட்கிழமை) 50 சதவீதம் அரசு பஸ்களை இயக்க தமிழக அரசு முடிவு செய்து அறிவித்தது.

50 சதவீத பஸ்கள் இயக்கம்

இதுகுறித்து கரூர் அரசு போக்குவரத்து கழக பொதுமேலாளர் கூறியதாவது:-

கரூர் மாவட்டத்தில், இன்று காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை 50 சதவீத பஸ்கள் இயக்கப்பட உள்ளன. ஒவ்வொரு பஸ்சிலும் தலா 60 சதவீத பயணிகள் மட்டுமே பயணிக்க முடியும். கரூரில் இருந்து நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்படும். இதில் நீண்ட தூரம் பயணம் செய்யும் பஸ்களில், 3 பேர் அமரும் இருக்கையில் இருவரும், இருவர் அமரும் இருக்கையில் ஒருவரும் அமர்ந்து செல்ல வேண்டும். நெடுந்தொலைவு பஸ்களில் மொத்தம் 32 பேர் மட்டும் அனுமதிக்கப்படுவர்.

டவுன் பஸ்களில் ஒரு சீட்டுக்கு ஒருவர் மட்டும் அமர்ந்து பயணம் செய்யும் படி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக டவுன் பஸ்களில் 24 பேர் மட்டுமே செல்லலாம்.

முக கவசம் அணிய வேண்டும்

டிரைவர், கண்டக்டர்கள் பணிக்கு வரும்போது, அவர்களின் உடல் வெப்பநிலை அளவிடப்பட்டு, கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்பு, முககவசம் அணிந்தபிறகே பணியில் அமர்த்தப்படுவார்கள். மேலும் டிரைவர், கண்டக்டர்களுக்கு கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம், வைட்டமின் மாத்திரைகள், இஞ்சி, சுக்கு டீ வழங்கப்படும். பயணிகள் பஸ்களில் பயணிக்கும்போது கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும். பஸ்சில் ஏறும்போதும், இறங்கும்போதும் பயணிகள் சமூக இடைவெளியை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பஸ்கள் இன்று இயக்கப்படுவதையொட்டி, கரூர், அரவக்குறிச்சி, குளித்தலை அரசு பணிமனைகளில் உள்ள அனைத்து பஸ்களும் சுத்தம் செய்யப்பட்டு, கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, தயாராக வைக்கப்பட்டுள்ளன.

Next Story