நெல்லை கோட்டத்தில் 900 பஸ்கள் இன்று முதல் இயக்கம்; பயணிகள் முககவசம் அணிவது கட்டாயம்


நெல்லை கோட்டத்தில் 900 பஸ்கள் இன்று முதல் இயக்கம்; பயணிகள் முககவசம் அணிவது கட்டாயம்
x
தினத்தந்தி 1 Jun 2020 12:35 PM IST (Updated: 1 Jun 2020 12:35 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை கோட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் 900 பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. பயணிகள் கட்டாயமாக முககவசம் அணிந்து வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

நெல்லை,

கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது ரெயில், பஸ் போன்ற பொது போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டது. கொரோனா பரவல் தீவிரமாக இருந்ததால், அடுத்தடுத்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வந்தது. தற்போது ஜூன் மாதம் முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இருந்தபோதிலும் பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்று (திங்கட்கிழமை) முதல் தமிழகத்துக்குள் 4 வழித்தடங்களில் ரெயில்கள் இயக்கப்படுகிறது. அதேபோல் இன்று 50 சதவீத பஸ் போக்குவரத்தும் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.

இந்த அறிவிப்பையொட்டி நெல்லையில் அரசு பஸ்களை இயக்க போக்குவரத்து கழக அதிகாரிகள், தொழிலாளர்கள் நேற்று தயாரானார்கள். என்ஜினீயரிங் பிரிவு தொழிலாளர்கள் பஸ்களை பராமரித்து வந்த போதிலும், பஸ்கள் சரியான நிலையில் உள்ளதா? என்று நேற்றும் உறுதி செய்தனர்.

நெல்லை அரசு போக்குவரத்து கழக கோட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி என 3 மண்டலங்கள் உள்ளன. இங்குள்ள பணிமனைகளில் 1,875 பஸ்கள் உள்ளன. இதில் 900 பஸ்களை இன்று முதல் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த பஸ்கள் அரசு உத்தரவுப்படி நெல்லை கோட்டத்துக்குள் அதாவது நெல்லை, தென்காசி, தூத்துக் குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டத்துக்குள் மட்டுமே இயக்கப்படுகிறது. வேறு பகுதிகளுக்கும், நீண்ட தூரத்துக்கும் இயக்குவதற்கு அனுமதி கிடையாது.

இதுகுறித்து நெல்லை அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:-

தமிழக அரசு உத்தரவுப்படி இன்று முதல் 50 சதவீத பஸ்கள் இயக்கப்படுகிறது. காலை 5 மணிக்கு பணிமனையில் இருந்து பஸ்கள் வெளியே செல்லும். இரவு 9 மணிக்குள் பணிமனைக்குள் பஸ்கள் திரும்பி வரும் வகையில் போக்குவரத்து செயல்படுத்தப்படும். இதில் ஏ.சி. வசதி பஸ்கள் இயக்கப்படாது. பணிமனையில் இருந்து பஸ் புறப்படும் போதும், திரும்ப வந்த பின்னரும் கிருமி நாசினி தெளிக்கப்படும். பணிக்கு புறப்படும் டிரைவர், கண்டக்டர்களுக்கு ‘தெர்மல் ஸ்கேனர்‘ மூலம் காய்ச்சல் இருக்கிறதா? என்பதை பார்த்து நல்ல நிலையில் இருப்பவர்கள் மட்டுமே பணிக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

பஸ்சில் டிரைவர், கண்டக்டர் கண்டிப்பாக முககவசம், கையுறை அணிந்திருக்க வேண்டும். இதேபோல் பயணிகளும் கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும். அதிகபட்சமாக ஒரு பஸ்சில் 40 பேர் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். பயணிகளின் கூட்டம் மற்றும் தேவைக்கு ஏற்ப 50 சதவீத பஸ்களும் முழுமையாக இயக்கப்படும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

இதேபோல் தனியார் பஸ்களையும் இன்று முதல் இயக்குவதற்கு தேவையான ஏற்பாடுகளை தனியார் பஸ் உரிமையாளர்கள் செய்து உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழகத்தில் பஸ்களை இயக்குவதற்கு ஊழியர்கள் தயாராகி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் 311 வழித்தடங்கள் உள்ளன. இதில் 150 வழித்தடங்களில் பஸ்கள் இயக்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கான டிரைவர்கள், கண்டக்டர்களை பணிக்கு அழைக்கும் பணியில் அதிகாரிகள் நேற்று ஈடுபட்டு இருந்தனர். வெளியூர்களில் உள்ள பணியாளர்கள், டெப்போவுக்கு வருவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளனர்.

அதேபோன்று தூத்துக்குடியில் தற்காலிக பஸ் நிலையம், மார்க்கெட்டாக இயங்கி வந்தது. இன்று முதல் பஸ்கள் இயக்கப்படுவதால், தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்த காய்கறி கடைகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த கடைகளை வேறு இடங்களுக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

Next Story