ஆர்.எஸ்.பாரதியை கண்டித்து நெல்லை- தென்காசியில் ஆர்ப்பாட்டம்


ஆர்.எஸ்.பாரதியை கண்டித்து நெல்லை- தென்காசியில் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 2 Jun 2020 3:45 AM IST (Updated: 2 Jun 2020 2:00 AM IST)
t-max-icont-min-icon

ஆர்.எஸ்.பாரதியை கண்டித்து நெல்லை, தென்காசியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

தென்காசி,

பட்டியல் இனத்தவர்களை பற்றி அவதூறாக பேசிய தி.மு.க. மாநில அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை கண்டித்து நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா உத்தரவின் பேரில் நெல்லை, பாளையங்கோட்டை, சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், கடையநல்லூர் ஆகிய 5 சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் அ.தி.மு.க.வினர் தங்கள் வீட்டு முன்பு நின்று கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறை பகுதியில் அ.தி.மு.க.வினர் 5 பேர் சமூக இடைவெளி கடைபிடித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அப்போது அவர்கள் தி.மு.க.வினரை கண்டித்து கோஷங்கள் போட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முக கவசம் அணிந்து இருந்தனர். இதேபோல் மாநகர பகுதியில் ஊருடையான்குடியிருப்பு, பொட்டல், பாளையங்கோட்டை சமாதானபுரம், பேட்டை, மகாராஜநகர் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இடங்களிலும், மாவட்டத்தில் நாங்குநேரி ஒன்றியம் காரியாண்டி, காடன்குளம், பொத்தையடி, ஏமன்குளம், மூலைக்கரைப்பட்டி, ராதாபுரம் தொகுதிக்குட்பட்ட பொன்னாத்தி மற்றும் புலிக்குளம் கிராமங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்.எஸ்.பாரதி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தென்காசியில் நேற்று ஆதிதிராவிட பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். சிந்தாமணி, உடையார் தெரு, மங்கம்மா சாலை, ஆசாத்நகர், தைக்கா தெரு, கீழப்புலியூர், பெரியபிள்ளைவலசை ஆகிய பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்தனர்.

இதேபோன்று செங்கோட்டை, கடையம் கல்யாணிபுரம், ஆழ்வார்குறிச்சி பகுதிகளிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Next Story