பெங்களூருவில் திருமணத்திற்கு மறுத்ததால் விபரீதம்: கன்னட சின்னத்திரை நடிகை விஷம் குடித்து தற்கொலை - செல்பி வீடியோவில் காதலன் மீது பரபரப்பு குற்றச்சாட்டு


பெங்களூருவில் திருமணத்திற்கு மறுத்ததால் விபரீதம்: கன்னட சின்னத்திரை நடிகை விஷம் குடித்து தற்கொலை - செல்பி வீடியோவில் காதலன் மீது பரபரப்பு குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 2 Jun 2020 4:30 AM IST (Updated: 2 Jun 2020 2:54 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் திருமணத்திற்கு மறுத்ததால் கன்னட சின்னத்திரை நடிகை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். விஷம் குடித்தப்படி அவர் செல்பி வீடியோவில் தனது காதலன் மீது பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

பெங்களூரு,

பெங்களூரு சுத்தகுண்டே பாளையா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கிருஷ்ணமூர்த்தி லே-அவுட்டில் வசித்து வந்தவர் சந்தனா (வயது 29). இவர், கன்னட சின்னத்திரை நடிகை ஆவார். தனியார் தொலைக்காட்சிகளில் பல்வேறு நாடகங்களும், சில விளம்பரங்களிலும் சந்தனா நடித்துள்ளார். இவருக்கும் தினேஷ் என்பவருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் தினேஷ், சந்தனா இடையே காதலாக மாறியது. இருவரும் ஜோடியாக பல்வேறு இடங்களில் ஒன்றாக சுற்றி திரிந்தனர்.

இந்த நிலையில், தனது வீட்டில் இருந்த நடிகை சந்தனா திடீரென்று விஷத்தை ஊற்றி குடித்தார். இதனால் அவர் மயக்கம் போட்டு கீழே விழுந்தார். வாயில் நுரை தள்ளியபடி உயிருக்கு போராடிய சந்தனாவை, அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சந்தனா பரிதாபமாக இறந்து விட்டார்.

இதுபற்றி அறிந்ததும் சுத்தகுண்டே பாளையா போலீசார் சம்பவ இடத்திற்கும், ஆஸ்பத்திரிக்கும் சென்று சந்தனாவின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது சந்தனா தான் தற்கொலை செய்தவற்காக விஷத்தை குடிப்பதை தனது செல்போனில் செல்பி வீடியோ எடுத்து வைத்திருந்தார். மேலும் தன்னுடைய தற்கொலைக்கு காதலன் தினேஷ் தான் காரணம் என்று அந்த வீடியோவில் அவர் பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார். அதாவது சந்தனாவும், தினேசும் 5 ஆண்டுக்கும் மேலாக காதலித்துள்ளனர். இவர்களது காதலுக்கு 2 பேரின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்து உள்ளனர். அத்துடன் சந்தனா, தினேசுக்கு திருமணம் செய்து வைக்கவும் முடிவு செய்திருந்தார்கள்.

அதே நேரத்தில் சந்தனாவிடம் இருந்து ரூ.5 லட்சத்திற்கும் மேல் தினேஷ் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது சந்தனாவை திருமணம் செய்ய தினேஷ் மறுத்ததுடன், பணத்தையும் திரும்ப கொடுக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மனம் உடைந்த சந்தனா விஷம் குடித்து தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சுத்தகுண்டே பாளையா போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான தினேசை வலைவீசி தேடிவருகிறார்கள்.

Next Story