குடிபோதையில் தகராறு செய்தவரை தட்டிக்கேட்ட கட்டிட தொழிலாளி குத்திக்கொலை


குடிபோதையில் தகராறு செய்தவரை தட்டிக்கேட்ட  கட்டிட தொழிலாளி குத்திக்கொலை
x
தினத்தந்தி 2 Jun 2020 3:09 AM IST (Updated: 2 Jun 2020 3:09 AM IST)
t-max-icont-min-icon

குடிபோதையில் தகராறு செய்தவரை தட்டிக்கேட்ட கட்டிட தொழிலாளி குத்திக்கொலை செய்யப்பட்டார்.

துடியலூர்,

கோவை நல்லாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சாமிகண்ணு என்பவருடைய மகன் சென்னையன் (வயது 42). கட்டிடத்தொழிலாளியான இவர் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் அந்த பகுதியில் வசித்து வந்தார். அதேபகுதியைச் சேர்ந்த சொக்கன் என்பவருடைய மகன் அசோக்குமார் குடிபோதையில் அப்பகுதியில் தங்கியுள்ள தனது தாய் மற்றும் பக்கத்து வீட்டாருடன் தகராறு செய்து கொண்டிருந்தார்.

இரவில் தூங்கிகொண்டிருந்த சென்னையன், அசோக்குமார் குடிபோதையில் கூச்சலிடுவதைக்கேட்டு சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார். அங்கு அசோக்குமார் தனது மாமா மற்றும் அப்பகுதி குடியிருப்புவாசிகளுடன் தகராறு செய்துகொண்டிருந்ததோடு, தனது தாயையும் தாக்கியதில் தாயும் காயமடைத்தார்.

தட்டிகேட்டவர் கொலை

இதுகுறித்து சென்னையன், அசோக்குமாரிடம் தட்டிக்கேட்டார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதனையடுத்து அசோக்குமாரை அதேபகுதியிலிருந்த வீட்டில் அடைத்து வைத்துள்ளார். அங்கு ஒரு கத்தியை எடுத்துமறைத்துக்கொண்டு வெளியேவந்த அசோக்குமார் கண்இமைக்கும் நேரத்தில் வெளியில் நின்றிருந்த சென்னையன் நெஞ்சுப்பகுதியில் குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சென்னையன் உயிருக்கு போராடினார். அக்கம்பக்கத்தினர் சென்னையனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் போகும் வழியிலேயே சென்னையன் இறந்துபோனார்.

இதுபற்றிய தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த துடியலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவான அசோக்குமாரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story