கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டு ரூ.7¼ கோடியில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்படும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்


கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டு  ரூ.7¼ கோடியில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்படும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்
x
தினத்தந்தி 2 Jun 2020 3:51 AM IST (Updated: 2 Jun 2020 3:51 AM IST)
t-max-icont-min-icon

கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டில் ரூ.7¼ கோடியில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

கோவை,

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த தாளக்கரை ஊராட்சி பச்சாகவுண்டன்பாளையத்தில், பரம்பிக்குளம்-ஆழியாறு திட்ட (பி.ஏ.பி.) பாசன வாய்க்கால் பகுதிகளில் குடிமராமத்து திட்டப்பணிகள் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

விவசாயிகளின் மிகுந்த வரவேற்பினை பெற்ற குடிமராமத்து திட்டத்தின் மூலம் ஊரகப்பகுதிகளில் நீர்வரத்து வாய்க்கால், கால்வாய்களில் இருக்கும் புதர்களை அகற்றுதல் உள்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் பழமையும், பெருமையும் வாய்ந்த நொய்யல் ஆற்றினை மீட்டெடுக்கும் வகையில் 158 கி.மீ. நீளத்திற்கு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள ரூ.230 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு முதல்-அமைச்சர் கடந்த 28-ந் தேதி பணிகளை தொடங்கி வைத்தார். இதற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இதன் மூலம் நொய்யல் ஆற்றுப்பாசனத்தினை சார்ந்து விவசாயம் செய்து வரும் கோவை மாவட்ட விவசாயிகளுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாகவும், உழவுத்தொழிலை இன்னும் தீவிரமாக மேற்கொள்ளும் நம்பிக்கையும் அளித்துள்ளது.

ரூ.7¼ கோடி

நடப்பு 2020-2021-ம் ஆண்டிற்கு தமிழக முதல்-அமைச்சர் குடிமராமத்து திட்டத்தின் கீழ் பொதுப்பணித்துறை, நீர்வள ஆதாரத்துறை மூலம் தமிழ்நாட்டில் ரூ.499.79 கோடி மதிப்பீட்டில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். அதன்படி கடந்த ஆண்டு கோவை மாவட்டத்தில் ரூ.7.43 கோடியில் 45 குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

நடப்பு ஆண்டில் ரூ.7.19 கோடியில் 43 குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. பரம்பிக்குளம் கோட்டத்தில் ரூ.4.39 கோடி மதிப்பீட்டில் 21 பணிகளும், ஆழியாறு வடிநில கோட்டத்தில் ரூ.2.80 கோடி மதிப்பீட்டில் 22 பணிகளும் மேற்கொள்ளப்படவுள்ளது. இப்பணிகளை பருவமழை காலத்திற்கு முன்னதாகவே, விரைந்து முடித்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாசன கால்வாய்களில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்றி கால்வாய்களை சுமார் 45.72 கி.மீ. தூரத்திற்கு தூர்வாரும் பணி, பாசன கால்வாய்களில் சேதமடைந்த 115 மதகுகளை சீரமைத்தல் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

விவசாயிகள் வருமானம்

இந்த திட்டத்தின் கீழ் சூலூரை அடுத்த பச்சாகவுண்டன்பாளையத்தில் பரம்பிக்குளம் ஆழியார் திட்டத்தை சேர்ந்த ஆழியார் வடிநில கோட்டத்தின் கீழ் 3 கிராம நீரினை பயன்படுத்தும் பாசன விவசாயிகள் நலசங்கங்களுக்கு ரூ.55 லட்சம் மதிப்பில் குடிமராமத்து பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. குடிமராமத்து திட்டத்தின் மூலம் வாய்க்காலில் வரும் நீரை பயன்படுத்தி விவசாயிகள் தங்களது வருமானத்தை பெருக்கிக் கொள்வதுடன் தங்கள் பகுதிகளின் நிலத்தடி நீரைத் தேங்க செய்யும் வகையில் மழைநீர் சேமிப்புத் திட்டங்களை செயல்படுத்த முடியும். பருவமழை காலங்களில் வீணாகும் மழைநீரை சேமிப்பதன் மூலம் விவசாயிகள் அதிக அளவில் விளைச்சல் பெற்று பயன் அடையலாம். இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் ராஜாமணி, வி.பி.கந்தசாமி எம்.எல்.ஏ., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ரமேஷ்குமார், பொதுப்பணித்துறை(நீர்வள ஆதாரம்) கண்காணிப்பு பொறியாளர் முத்துசாமி, செயற்பொறியாளர் ஜே.கோபி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Next Story