சம்பளம் வழங்கக்கோரி கல்வித்துறை இயக்குனர் அலுவலகத்தை ஆசிரியர்கள் முற்றுகை


சம்பளம் வழங்கக்கோரி கல்வித்துறை இயக்குனர் அலுவலகத்தை ஆசிரியர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 2 Jun 2020 4:03 AM IST (Updated: 2 Jun 2020 4:03 AM IST)
t-max-icont-min-icon

புதுவை அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் கடந்த 7 மாதங்களாக வழங்கப்படவில்லை.

புதுச்சேரி,

சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்க கோரி அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் புதுவை நூறடி சாலையில் உள்ள கல்வித்துறை இயக்குனர் அலுவலகத்தை அரசு நிதி உதவிபறும் பள்ளி ஆசிரியர்கள் நேற்று முற்றுகையிட்டனர்.

இந்த முற்றுகை போராட்டத்துக்கு அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் சேஷாச்சலம் தலைமை தாங்கினார். முற்றுகையில் ஈடுபட்ட தனியார் பள்ளி ஆசிரியர்கள் பலரும் கோரிக்கை அட்டையுடன் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது ஆசிரியர்களுக்கு ஒரு மாத சம்பளமும், ஓய்வூதியதாரர்களுக்கு இரண்டு மாதத்துக்கான ஓய்வூதியமும் 2 நாட்களில் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதைத்தொடர்ந்து மாலையில் ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர். அதேநேரத்தில் சம்பளம் வழங்காவிட்டால் வருகிற 4-ந் தேதி முதல் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக சேஷாச்சலம் தெரிவித்தார்.

Next Story