கோவையில் இருந்து இயக்கப்பட்ட மயிலாடுதுறை, காட்பாடி சிறப்பு ரெயில்களில் 493 பேர் மட்டுமே சென்றனர் இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டதால் பயணத்தை பலர் ரத்து செய்தனர்


கோவையில் இருந்து இயக்கப்பட்ட மயிலாடுதுறை, காட்பாடி சிறப்பு ரெயில்களில் 493 பேர் மட்டுமே சென்றனர் இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டதால் பயணத்தை பலர் ரத்து செய்தனர்
x
தினத்தந்தி 2 Jun 2020 4:13 AM IST (Updated: 2 Jun 2020 4:13 AM IST)
t-max-icont-min-icon

கோவையிலிருந்து இயக்கப்பட்ட மயிலாடுதுறை, காட்பாடி சிறப்பு ரெயில்களில் 493 பயணிகள் மட்டுமே சென்றனர். இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டதால் பலர் பயணத்தை ரத்து செய்தனர்.

கோவை,

கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 மாதமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பஸ், ரெயில் போன்ற பொது போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே பொதுமக்கள் இ-பாஸ் வாங்கி சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் நேற்று முதல் 4 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. கோவை-காட்பாடி இடையே காலை 6.15 மணிக்கு சிறப்பு இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. அந்த ரெயில் காலை 11.50 மணிக்கு காட்பாடியை சென்றடையும். இதில் மொத்தம் 19 பெட்டிகள் இணைக்கப்பட்டிருந்தன. இதில் 113 பேர் பயணம் செய்தனர்.

பயணிகளுக்கு பரிசோதனை

இதே போல கோவையிலிருந்து மயிலாடுதுறைக்கு செல்லும் ஜன்சதாப்தி எக்ஸ்பிரஸ் கோவை ரெயில் நிலையத்தில் இருந்து காலை 7.15 மணிக்கு புறப்பட்டது. அதில் 380 பேர் பயணம் செய்தனர். இது மதியம் 1.40 மணிக்கு மயிலாடுதுறைக்கு சென்றடைந்தது. முன்னதாக இந்த இரண்டு ரெயில்களும் கோவையிலிருந்து புறப்பட்டபோது 90 நிமிடங்களுக்கு முன்னதாக பயணிகள் வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி பயணிகள் அனைவரும் ரெயில் நிலையத்துக்கு வந்திருந்தனர். அங்கு முன்பதிவு டிக்கெட் வைத்திருந்த பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

தனி நபர் இடைவெளி விட்டு நின்றிருந்த பயணிகளுக்கு முதலில் தெர்மல் ஸ்கேன் மூலம் காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் அங்கு இருந்த ரெயில்வே துறையின் டாக்டர்கள் குழுவினர் பயணிகளுக்கு யாருக்காவது காய்ச்சல், இருமல், சளி போன்ற அறிகுறிகள் இருக்கிறதா? என்று விசாரித்தனர். ஆனால் அத்தகைய அறிகுறிகள் யாருக்கும் இல்லை. பயணிகள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருந்தனர். அவர்களின் உடைமைகள் மெட்டல் டிடெக்டர் கொண்டு பரிசோதனை செய்யப்பட்டன. அதன்பின்னர் பயணிகள் ரெயில்நிலையத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இ-பாஸ் இல்லாமல் வந்த பயணிகள்

நடைமேடையில் தனி நபர் இடைவெளி விட்டு நின்றிருந்த அவர்கள் ரெயில் வந்ததும் அதில் ஏறினார்கள். 3 பேர் அமரும் இருக்கையில் 2 பேர் மட்டுமே உட்கார அனுமதிக்கப்பட்டனர். அதன்பின்னர் ரெயில்கள் புறப்பட்டு சென்றன. ரெயிலில் சென்ற டிக்கெட் பரிசோதகர்கள் அனைவரும் முகக்கவசம் மற்றும் பாதுகாப்பு கண்ணாடி, கையுறைகள் அணிந்திருந்தனர். இந்த ரெயில்கள் மறுமார்க்கமாக காட்பாடியிலிருந்து புறப்பட்ட ரெயில் கோவைக்கு நேற்று இரவு 10.15 மணிக்கும், மயிலாடுதுறையில் இருந்து புறப்பட்ட ரெயில் இரவு 9.15 மணிக்கும் கோவை வந்து சேர்ந்தன.

முன்னதாக ரெயில் பயணிகள் அனைவரும் தங்கள் பெயர், போய் சேரும் இடத்தின் முகவரி, ஆதார் எண், செல்போன் எண் போன்ற தகவல்களை ஒரு வெள்ளை பேப்பரில் எழுதி ரெயில் நிலைய அதிகாரிகளிடம் கொடுத்தனர். ஒரு மண்டலம் விட்டு மற்றொரு மண்டலத்துக்கு ரெயிலில் செல்ல வேண்டுமென்றாலும் இ-பாஸ் கட்டாயம் வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த தகவல் பயணிகளுக்கு தாமதமாகத் தான் தெரியும் என்பதால் மண்டலம் விட்டு மண்டலம் செல்லும் பெரும்பாலான பயணிகள் இ-பாஸ் இல்லாமலேயே வந்தனர். ஆனால் அவர்களிடம் கோவை ரெயில் நிலையத்தில் ரெயில்வே அதிகாரிகள் யாரும் இ-பாஸ் கேட்கவில்லை. அவர்கள் இறங்கும் இடத்தில் தான் இ-பாஸ் கேட்பார்கள் என்று தெரிகிறது.

பயணத்தை ரத்து செய்தனர்

இதுகுறித்து கோவை ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கோவையிலிருந்து மயிலாடுதுறைக்கு சென்ற சிறப்பு ரெயிலில் மொத்தம் ஆயிரத்து 434 இருக்கைகள் இருந்தன. அதில் கோவையிலிருந்து பயணம் செய்ய 424 பேர் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தனர். ஆனால் அவர்களில் 350 பேர் தான் வந்திருந்தனர். மற்றவர்கள் வரவில்லை. இதே போல திருப்பூரிலிருந்து 225 பேரும், ஈரோட்டிலிருந்து 106 பேரும், கரூரிலிருந்து 14 பேரும் அந்த ரெயிலில் பயணம் செய்தனர்.

ரெயிலில் மண்டலம் விட்டு மண்டலம் விட்டு செல்பவர்களுக்கு இ-பாஸ் வேண்டும் என்று கடைசி நேரத்தில் சொன்னதால் பலர் அதை எடுக்க முடியாமல் பயணத்தை ரத்து செய்தனர். சிறப்பு ரெயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பு டிக்கெட்டை ரத்து செய்தால் தான் கட்டணம் திரும்ப கிடைக்கும். ஆனால் பலர் இ-பாஸ் இல்லாததால் கடைசி நேரத்தில் டிக்கெட்டுகளை ரத்து செய்ததால் அவர் களுக்கு கட்டணம் திரும்ப கிடைக்காது.

மேலும் இ-பாஸ் இல்லாமல் சென்றால் பிரச்சினை ஏற்படும் என்று கருதி பலர் கடைசி நேரத்தில் தங்கள் பயணத்தை ரத்து செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story