அம்மா உணவகங்களில் இலவச உணவு: செலவுத்தொகை ரூ.86.19 லட்சத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்
கோவை மாவட்டத்தில் உள்ள அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கியதற்கான செலவுத்தொகை ரூ.86 லட்சத்து 19 ஆயிரத்துக்கான ரொக்கத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மாவட்ட கலெக்டரிடம் வழங்கினார்.
கோவை,
கோவை மாவட்டத்தில் அம்மா உணவகங்களில் ஊரடங்கு காலத்தில் இலவச உணவு வழங்கப்பட்டு வந்தது. அதற்கான செலவினத் தொகையை கோவை மாவட்ட அ.தி.மு.க. ஏற்கும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவித்து இருந்தார். அதன்படி இந்த தொகையை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி சிறப்பு திட்டங்கள் அமலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு, இலவச உணவு வழங்குவதற்கான மொத்த தொகை ரூ. 86 லட்சத்து 19 ஆயிரத்தை ரொக்கமாக மாவட்ட கலெக்டர் ராஜாமணியிடம் வழங்கினார். அப்போது அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியதாவது:-
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்திட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்படி, கோவை மாவட்டத்தில் வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டிவரும் அதே வேளையில், சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம் காய்கறி உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் வழங்குதல், சாலையோரத்தில் வசிப்போருக்கு உணவு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளின் மூலம் அனைவருக்கும் உணவு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது.
அம்மா உணவகங்கள்
மேலும், ஏழை-எளிய மக்களின் அட்சயபாத்திரமாக விளங்கும் அம்மா உணவகங்களில் இரண்டு வேளையிலிருந்து காலை மதியம் மற்றும் இரவு என்று மூன்று வேளைகளில் உணவு வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ஏழை எளியோரின் பசியாற்றும் பணியில் அம்மா உணவகம் மிகச்சிறந்த பங்காற்றி வருகிறது. மேலும், நாளுக்கு நாள் அம்மா உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. அனைத்து மக்களும் உணவு வழங்கிட ஏதுவாக, சமைத்து வரும் உணவின் அளவினை உயர்த்திடவும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில், மாநகராட்சி பகுதிகளில் உள்ள 12 அம்மா உணவகங்களுக்கும், நகராட்சிகளில் உள்ள 3 அம்மா உணவகங்களுக்கும் தலா ரூ.2 லட்சம் மதிப்பில் பாத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சி பகுதியிலுள்ள அம்மா உணவகங்களில் 7 லட்சத்து 96 ஆயிரத்து 826 நபர்கள் ரூ.41.38 லட்சம் மதிப்பில், உணவு உண்டு பயன் அடைந்துள்ளனர். மேலும், அம்மா உணவகங்களில் உணவுடன் முட்டைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. கோவை மாநகராட்சி அம்மா உணவகத்தில் ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 958 நபர்களுக்கு ரூ.7.82 லட்சம் மதிப்பில் முட்டைகள் என மொத்தம்ரூ.49.21 லட்சம் மதிப்பில் உணவு மற்றும் முட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
ரூ.86.19 லட்சத்தை அமைச்சர் வழங்கினார்
பொள்ளாச்சியிலுள்ள அம்மா உணவகத்தில் கடந்த 31-ந் தேதி முதல் காலை, மாலை, இரவு என மூன்று வேளைகளில் 64 ஆயிரத்து 14 நபர்கள் ரூ.3.67 லட்சம் மதிப்பிலும், மேட்டுப்பாளையத்திலுள்ள அம்மா உணவகத்தில் 37 ஆயிரத்து 300 நபர்கள் ரூ.2.62 லட்சம் மதிப்பிலும், வால்பாறையிலுள்ள அம்மா உணவகத்தில் 85 ஆயிரத்து 94 நபர்களுக்கு ரூ.5.6 லட்சம் மதிப்பிலும், என மொத்தம் ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 408 நபர்கள் ரூ.11.98 லட்சம் மதிப்பில் மூன்று வேளையும் உணவு உண்டு பயன் அடைந்துள்ளனர்.
இதற்கான மொத்த செலவினத்தொகை ரூ.61.19 லட்சத்தையும், மேலும், ஊரடங்கு காலம் முடியும் வரை கோவை மாவட்டத்திலுள்ள அனைத்து அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்குதற்கான செலவினத்திற்கு முன்பணமாக தோராயமாக ரூ.25 லட்சம் என மொத்தம்
ரூ.86.19 லட்சம் ரொக்கமாக கோவை புறநகர் மற்றும் மாநகர் மாவட்ட அனைத்திந்திய அ.தி.மு.க. சார்பில் மாவட்ட கலெக்டரிடம் வழங்கப்பட்டது. கோவை மாவட்டத்தில் செயல்படும் அம்மா உணவகங்களில் சாப்பிடும் அனைவருக்கும், ஊரடங்கு காலம் முடியும் வரை உணவிற்கான கட்டணம் வசூலிக்கப்படாது. அதற்கான கட்டணத்தை அ.தி.மு.க.வே ஏற்றுக் கொள்ளும்.
இவ்வாறு அவர் கூறினார். அப்போது தமிழக சட்டசபை துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், எம்.எல்.ஏ.க்கள் அம்மன் அர்ச்சுனன், வி.சி.ஆறுக் குட்டி, ஓ.கே.சின்னராஜ், எட்டிமடை சண்முகம், கஸ்தூரிவாசு, வி.பி.கந்தசாமி, முன்னாள் எம்.பி. ஏ.கே.செல்வராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story