வட்டியுடன் கடனை திருப்பி செலுத்த வற்புறுத்தும் தனியார் நிதி நிறுவனங்கள் கலெக்டரிடம் பெண்கள் புகார்


வட்டியுடன் கடனை திருப்பி செலுத்த வற்புறுத்தும் தனியார் நிதி நிறுவனங்கள்  கலெக்டரிடம் பெண்கள் புகார்
x
தினத்தந்தி 2 Jun 2020 4:51 AM IST (Updated: 2 Jun 2020 4:51 AM IST)
t-max-icont-min-icon

வட்டியுடன் கடனை திருப்பி செலுத்த தனியார் நிதி நிறுவனங்கள் வற்புறுத்துவதாக கலெக்டரிடம் பெண்கள் புகார் அளித்தனர்.

ஊட்டி,

ஊரடங்கு உத்தரவால் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் சுற்றுலா பயணிகளை நம்பி சுற்றுலா தொழிலில் ஈடுபட்டு வந்த நடைபாதை வியாபாரிகள், சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் உள்பட பலர் வாழ்வாதாரம் இழந்து உள்ளனர். தங்கும் விடுதிகள் மூடப்பட்டதால், அங்கு பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் வேலையிழந்து வருமானம் இல்லாமல் அவதி அடைந்தனர். இதை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் 6 மாத தவணைகளை வங்கிகள், அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிதி நிறுவனங்கள் பிடித்தம் செய்யக்கூடாது என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

இதற்கிடையே ஊட்டியில் தனியார் நிதி நிறுவனங்கள் மக்கள், தொழிலாளர்கள் வாங்கிய கடனை உடனடியாக செலுத்த வேண்டும் என்று வீடுகளுக்கே சென்று வற்புறுத்தி வருகின்றனர். இதனால் அவர்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.

வற்புறுத்தல்

இந்த நிலையில் நேற்று ஊட்டி வேலிவியூ பகுதியில் வசித்து வரும் பெண்கள், கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

நாங்கள் ஒவ்வொருவரும் தனியார் நிதி நிறுவனங்கள் மூலம் தலா 5 முறை கடன் வாங்கினோம். ஊரடங்கால் வேலைக்கு செல்ல முடியாததால், வீட்டில் இருந்து வருகிறோம். இதனால் தற்போது கடன் தொகையை செலுத்த முடியவில்லை. நாங்கள் வீட்டு வேலை மற்றும் தங்கும் விடுதிகளில் பணிபுரிந்து வந்தோம். ஊரடங்கு உத்தரவால் வேலையிழந்து வருவாய் இன்றி தவித்து வருகிறோம். இந்த சூழ்நிலையில் தனியார் நிதி நிறுவனத்தினர் வட்டியுடன் கடனை திருப்பி செலுத்துமாறு வற்புறுத்தி வருகின்றனர்.

கால அவகாசம்

வீட்டு வாடகையை கட்ட முடியாமலும், அத்தியாவசிய பொருட்களை வாங்க இயலாமலும் சிரமப்பட்டு வருகிறோம். இதற்கிடையே பிள்ளைகளின் கல்வி, மருத்துவ செலவு போன்றவற்றை கவனிக்க வேண்டி உள்ளது. எனவே நாங்கள் கடன் தொகையை கட்ட 3 மாதம் கால அவகாசம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. இதுகுறித்து பெண்களிடம் கலெக்டர் பேசும்போது, மகளிர்கள் குழுவாக இணைந்து மகளிர் திட்டம் மூலம் விண்ணப்பித்தால் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கூட்டுறவு வங்கிகள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Next Story