தம்பதி உள்பட மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று


தம்பதி உள்பட மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 1 Jun 2020 11:36 PM GMT (Updated: 1 Jun 2020 11:36 PM GMT)

புதுச்சேரியில் தம்பதி உள்பட மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது.

புதுச்சேரி,

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் 70 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் புதுவை கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் 36 பேரும், ஜிப்மர் மருத்துவமனையில் 9 பேரும், சேலத்தில் ஒருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை சிகிச்சை குணமடைந்து 25 பேர் வீடு திரும்பி உள்ளனர். மாகியில் முதியவர் ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. புதுவை பிராந்திய பகுதிகளான காரைக்கால், மாகி மற்றும் ஏனாமில் தற்போது யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை.

புதுவை மாநிலத்தில் 46 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் குருமாம்பேட்டை சேர்ந்தவர் குணமடைந்து வீடு திரும்பினார். இந்தநிலையில் தற்போது மேலும் 7 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதாவது கொம்பாக்கத்தை சேர்ந்த தம்பதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அன்னை தெரசா நகரைச் சேர்ந்தவருக்கும், சென்னையில் வசிக்கும் புதுச்சேரியைச் சேர்ந்த ஒருவருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டபோது சோலை நகரை சேர்ந்த 3 வயது சிறுமி உள்பட மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இவர்களையும் சேர்த்து புதுவையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால் கொரோனா தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் முக கவசம் அணிவதுடன் கண்டிப்பாக சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முக கவசத்தை மூக்கை மூடி இருக்குமாறு அணியவேண்டும். 50 சதவீதம் பேர் அவ்வாறு அணிவதில்லை.

இந்த தகவலை புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் மோகன் குமார் தெரிவித்துள்ளார்.

Next Story