ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் செயல்பட்ட 70 கடைகள் நகராட்சி மார்க்கெட்டுக்கு மீண்டும் மாற்றம்
ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் செயல்பட்ட 70 கடைகள் நகராட்சி மார்க்கெட்டுக்கு மீண்டும் மாற்றப்பட்டு உள்ளது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் 1,300 கடைகள் செயல்பட்டு வருகின்றன. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாகவும், கூட்டத்தை கட்டுப்படுத்தவும் மார்க்கெட் மூடப்பட்டது. அங்கு ரேஷன் கடைகள், மொத்த விற்பனை கடைகள், நாட்டு மருந்து கடைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது. காய்கறி, பழங்கள், மளிகை கடைகள் என 70 கடைகள் ஊட்டி மத்திய பஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டு திறந்தவெளி சந்தையாக அமைக்கப்பட்டது.
அரசு பஸ்கள் ஓடாததால் சமூக இடைவெளி விட்டு கடைகள் 2 மாதங்களாக செயல்பட்டு வந்தன. இதற்கிடையே குறைந்த பயணிகளுடன் அரசு பஸ்கள் இயக்க அனுமதிக்கப்பட்டது.
70 கடைகள் மீண்டும் மாற்றம்
அதனை தொடர்ந்து மத்திய பஸ் நிலையத்தில் கடைகளை காலி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது. நேற்று முன்தினம் இரவு வியாபாரிகள் கடைகளில் வைத்திருந்த பொருட்களை சரக்கு வாகனங்களில் ஏற்றினர். மேலும் தற்காலிகமாக மேற்கூரையில் போடப்பட்டு இருந்த தார்பாய்கள், கம்புகள் போன்றவற்றை அகற்றி கடைகளை காலி செய்தனர்.
இந்த நிலையில் நேற்று மத்திய பஸ் நிலையத்தில் காலி செய்யப்பட்ட கடைகள் ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் சுழற்சி முறையில்(அதாவது ஏ,பி,சி) செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது. இதன் மூலம் 70 கடைகள் நகராட்சி மார்க்கெட்டுக்கு மீண்டும் மாற்றப்பட்டு உள்ளது.
சுழற்சி முறை
அங்கு வாடிக்கையாளர்கள் கைகளை கழுவ தண்ணீர், சோப்பு கடைகள் முன்பு வைக்கப்பட்டதோடு, சமூக இடைவெளியை கடைபிடிக்க கடைக்காரர்களே அதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.
காய்கறி, பழக்கடைகள் பல நாட்களுக்கு பின்னர் செயல்பட்டதால் அதனை வாங்க பொதுமக்கள் வந்திருந்தனர். மார்க்கெட்டில் ஒரு நாளைக்கு 160 கடைகளும், சுழற்சி முறையில் 480 கடைகளும் திறந்து செயல்பட்டு வருகிறது. காய்கறிகள், பழங்கள், பூ கடைகள் 3 நாளைக்கு ஒரு முறை என சுழற்சி முறையில் செயல்படுவதால் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ள பொருட்கள் சேதமடையும் நிலை உள்ளது. இதனால் இந்த கடைகளை தொடர்ந்து செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story