குளங்கள் தூர் வாரும் பணி; அமைச்சர் கந்தசாமி தொடங்கி வைத்தார்


குளங்கள் தூர் வாரும் பணி; அமைச்சர் கந்தசாமி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 1 Jun 2020 11:54 PM GMT (Updated: 1 Jun 2020 11:54 PM GMT)

அபிஷேகப்பாக்கம், கரிக்கலாம்பாக்கம் ஆகிய பகுதியில் உள்ள குளங்களை தூர்வாரும் பணியை அமைச்சர் கந்தசாமி தொடங்கி வைத்தார்.

பாகூர்,

புதுச்சேரி மணவெளி தொகுதிக்குட்பட்ட அபிஷேகப்பாக்கம், தமிழக பகுதியான கடலூர் மாவட்டம் சிங்கிரிகுடி ஆகிய பகுதிகள் இரு மாநிலங்களுடனும் பின்னிப் பிணைந்து காணப்படும். இந்த பகுதியில் மணக்குளம் என்னும் குளம் உள்ளது. இந்த குளத்தை புதுச்சேரி, தமிழக அரசுகள் இணைந்து தூர்வார திட்டமிட்டன. ஆனால் குளம் தூர்வாரும் பணி நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்து வந்தது.

இந்தநிலையில் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் தனியார் பங்களிப்புடன் அந்த குளத்தை தூர்வாரும் பணி தொடங்கியது. கரிக்கலாம்பாக்கம் புதுக்கடை பகுதியில் உள்ள குளத்தில் புதுச்சேரி நீர்நிலை பாதுகாப்பு குழு சார்பில் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டது.

குளங்களை தூர்வாரும் பணியை புதுச்சேரி அமைச்சர் கந்தசாமி தலைமை தாங்கி நேற்று தொடங்கி வைத்தார். புதுச்சேரி கலெக்டர் அருண், கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன், அரசுகொறடா அனந்தராமன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முன்னதாக கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள் சவுந்திரராஜன் (அரியாங்குப்பம்), மனோகரன் (நெட்டப்பாக்கம்) ஆகியோர் வரவேற்றனர். புதுக்கடை ஊராட்சி ஒன்றிய தலைவர் கனகராஜ், சிங்கிரிகுடி ஊராட்சி மன்ற தலைவர் ராமச்சந்திரன் மற்றும் இரு மாநில அதிகாரிகள் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதற்கிடையே கரிக்கலாம்பாக்கம் புதுக்கடையை சேர்ந்த பொதுமக்கள், அரசு சார்பில் தூர்வாரப்படும் குளக்கரையை சுடுகாடாக பயன்படுத்தி வருகிறோம். எங்களுக்கு சுடுகாடு அமைக்க மாற்று இடம் தர வேண்டும். மேலும் இந்த குளத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் அதுவரை தூர்வாரும் பணியை நிறுத்தி வைக்குமாறு கடலூர் கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து புதுக்கடை பகுதியில் உள்ள குளம் தூர்வாரும் பணி நிறுத்தப்பட்டது.

Next Story