திண்டுக்கல் மாவட்டத்தில் 2 மாதங்களுக்கு பிறகு பஸ் போக்குவரத்து தொடங்கியது கொரோனா அச்சுறுத்தலால் பெரும்பாலான பஸ்கள் காலியாக சென்றன


திண்டுக்கல் மாவட்டத்தில் 2 மாதங்களுக்கு பிறகு பஸ் போக்குவரத்து தொடங்கியது கொரோனா அச்சுறுத்தலால் பெரும்பாலான பஸ்கள் காலியாக சென்றன
x
தினத்தந்தி 2 Jun 2020 6:03 AM IST (Updated: 2 Jun 2020 6:03 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் 2 மாதத்திற்கு பிறகு பஸ் போக்குவரத்து தொடங்கியது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பெரும்பாலான பஸ்கள் பயணிகள் இன்றி காலியாக சென்றன.

திண்டுக்கல், 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு காரணமாக கடந்த 2 மாதங்களாக பஸ்கள் இயக்கப்படவில்லை. இருப்பினும் அரசு ஊழியர்களுக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இந்தநிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்தி, பொதுமக்களின் பயன்பாட்டுக்காக பஸ்களை இயக்குவதற்கு அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து நேற்று மாநிலம் முழுவதும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.

திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தம் 431 அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால், 50 சதவீத அரசு பஸ்களை மட்டுமே இயக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு இருந்தது. இதனால் 103 நகர பஸ்கள், 94 புறநகர் பஸ்கள் மற்றும் 19 மலைக்கிராம பஸ்கள் என மொத்தம் 216 பஸ்கள் இயக்கப்பட்டன.

60 சதவீத பயணிகள்

இதற்காக போக்குவரத்து கழக பணிமனைகளில் இருந்து அரசு பஸ்கள் சுத்தம் செய்யப்பட்டு பஸ்நிலையங்களுக்கு கொண்டு வரப்பட்டன. மேலும் பஸ்கள் புறப்படுவதற்கு முன்பு அனைத்து பஸ்களிலும் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டது. அதேபோல் பஸ்களில் 60 சதவீத பயணிகளை மட்டுமே ஏற்றுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.

இதனால் ஒவ்வொரு பஸ்சிலும் தலா 34 பயணிகளை மட்டுமே ஏற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. மேலும் பஸ்களில் பயணிகள் சமூக இடைவெளி விட்டு அமர வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இதற்காக சமூக இடைவெளியுடன் இருக்கைகளை குறிப்பிடும் வகையில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது.

காய்ச்சல் பரிசோதனை

மேலும் பஸ்களில் பின்வாசல் வழியாக மட்டுமே பயணிகள் ஏறுவதற்கு அனுமதிக்கப்பட்டனர். பின்னர் முன்வாசல் வழியாக பயணிகள் இறக்கி விடப்பட்டனர். முக கவசம் அணிந்த பயணிகள் மட்டுமே பஸ்சில் ஏறுவதற்கு அனுமதிக்கப்பட்டனர். அதேபோல் திண்டுக்கல் காமராஜர் பஸ்நிலையம் உள்பட முக்கிய பஸ்நிலையங்களில் மருத்துவக்குழுவினர் நியமிக்கப்பட்டனர்.

இந்த மருத்துவ குழுவினர் பயணிகளுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்தனர். பெரும்பாலான பயணிகள் தாமாக முன்வந்து காய்ச்சல் பரிசோதனை செய்து கொண்டனர்.

காலியாக சென்றன

2 மாதங்களுக்கு பின்னர் பஸ்கள் இயக்கப்பட்ட போதிலும், புறநகர் பஸ்களில் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான பயணிகளே பயணித்தனர். நகர பஸ்களில் காலையில் ஓரளவு பயணிகள் பயணம் செய்தனர். அதுவே மதிய வேளையில் பெரும்பாலான பஸ்கள் காலியாக சென்றன. கொரோனா அச்சுறுத்தலால் பயணிகள் எண்ணிக்கை குறைந்து இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதேபோல் பழனி, வேடசந்தூர் என மாவட்டம் முழுவதும் குறைந்த எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்பட்டன.

இதற்கிடையே திண்டுக்கல் காமராஜர் பஸ் நிலையத்தில் பஸ்கள் இயக்கப்படுவதை, போக்குவரத்து கழக மண்டல பொதுமேலாளர் கணேசன் ஆய்வு செய்தார். அப்போது பஸ்கள் புறப்படும் இடம், சேரும் இடம் ஆகியவற்றில் கட்டாயம் கிருமிநாசினி மருந்து தெளிக்க வேண்டும். டிரைவர், கண்டக்டர்கள் கையுறை, முக கவசம் அணிய வேண்டும். இதனை போக்குவரத்து அதிகாரிகள் முழுமையாக கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

Next Story