நினைவு தினம்: மார்ஷல் நேசமணி சிலைக்கு, அரசு சார்பில் மரியாதை கலெக்டர் பிரசாந்த் வடநேரே மாலை அணிவித்தார்
மார்ஷல் நேசமணியின் நினைவு தினத்தையொட்டி நாகர்கோவிலில் உள்ள அவருடைய சிலைக்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நாகர்கோவில்,
மார்ஷல் நேசமணியின் நினைவு தினத்தையொட்டி நாகர்கோவிலில் உள்ள அவருடைய சிலைக்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தளவாய்சுந்தரம்,- வசந்தகுமார் எம்.பி.யும் மரியாதை செலுத்தினர்.
மார்ஷல் நேசமணி
கேரளாவுடன் இணைந்திருந்த குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைய நடந்த போராட்டத்தை முன்னின்று நடத்தியவர் குமரித்தந்தை என்று அழைக்கப்படும் மார்ஷல் நேசமணி ஆவார். அவருக்கு நாகர்கோவில் மாநகராட்சி பூங்கா அருகில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள நேசமணி சிலைக்கு அவருடைய பிறந்தநாள் மற்றும் நினைவு நாளில் அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள மார்ஷல் நேசமணி சிலைக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்று காலை கலெக்டர் பிரசாந்த் வடநேரே மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அ.தி.மு.க.
நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் முன்புறம் உள்ள அவருடைய சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் தலைமை தாங்கி மாலை அணிவித்தார். குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.ஏ.அசோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் காங்கிரஸ் கட்சி சார்பில் நேசமணி சிலைக்கு எச்.வசந்தகுமார் எம்.பி. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் பிரின்ஸ் எம்.எல்.ஏ., கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், நகர தலைவர் அலெக்ஸ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண் டனர். இதே போல் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
குமரி மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில் நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் முன்புள்ள நேசமணி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜன், சாய் மணிகண்டன், கோபால், ஏசுதாஸ், ஷாஜி கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story